
புதுடெல்லி: மே 26 –
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி முதல்வர்கள் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் ஆபரேஷன் சிந்தூர், சாதிவாரி கணக்கெடுப்பு, மத்திய அரசின் ஓராண்டு ஆட்சி குறித்து விரிவான ஆலோசனை நடத்தப்பட்டது.
மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது.
குஜராத், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், ஒடிசா, கோவா, டெல்லி, ஹரியானா, அசாம், திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் பாஜக ஆட்சி நடைபெறுகிறது. மகாராஷ்டிரா, பிஹார், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறது.
இந்த சூழலில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் தேசிய ஜனநாயக
கூட்டணி முதல்வர்கள், துணை முதல்வர்களின் கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. இதில் 20 முதல்வர்கள்,
18 துணை முதல்வர்கள் பங்கேற்றனர்.
மத்திய அமைச்சரும் பாஜக தேசிய தலைவருமான ஜே.பி.நட்டா, மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங் மற்றும் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், பிஹார் முதல்வர் நிதிஷ் குமார், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், குஜராத் முதல்வர் பூபேந்திர படேல், அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண், மகாராஷ்டிர துணை முதல்வர்கள் ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் உள்ளிட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.