
விசாகப்பட்டினம், ஜன. 30- நியூஸிலாந்து அணிக்கு எதிராக நேற்று முன்தினம் விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற 4-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. 216 ரன்கள் இலக்கை துரத்திய இந்திய அணி 18.4 ஓவர்களில் 165 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக ஷிவம் துபே 23 பந்துகளில், 7 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் விளாசினார். ரிங்கு சிங் 30 பந்துகளில், 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 39 ரன்கள் சேர்த்தார்.
அபிஷேக் சர்மா 0, கேப்டன் சூர்யகுமார் யாதவ் 8, ஹர்திக் பாண்டியா 2 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர். சஞ்சு சாம்சன் 15 பந்துகளில் 24 ரன்கள் சேர்த்த நிலையில் மிட்செல் சாண்ட்னர் பந்தில் எளிதாக போல்டானார். இந்த ஆட்டத்தில் இந்திய அணி 6 பேட்ஸ்மேன்கள், 5 பிரதான பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கியது. இஷான் கிஷனுக்கு ஓய்வு கொடுக்கப்பட்ட நிலையில் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களிடம் இருந்து சிறப்பான செயல் திறன் வெளிப்படவில்லை. நடு ஓவர்களில் ஷிவம் துபே அதிரடியாக விளையாடினார். ஆனால் மறுமுனையில் அவருக்கு உறுதுணையாக மட்டையை விளாசும் வகையில் எந்த பேட்ஸ்மேனும் இல்லாதது பின்னடைவாக அமைந்தது. ஷிவம் துபே ஆட்டமிழந்த பின்னர் முழுமையாக 5 ஓவர்கள் மீதம் இருந்தன. ஆனால் பின்வரிசை பேட்டிங்கில் அனைத்துமே பந்துவீச்சாளர்களாக இருந்ததால் அவர்களிடம் இருந்து பெரிய அளவிலான தாக்குதல் ஆட்டம் வெளிப்படவில்லை. விசாகப்பட்டினம் போட்டிக்கு பின்னர் இந்திய அணியின் கேப்டனான சூர்யகுமார் யாதவ் கூறியதாவது: நியூஸிலாந்து அணிக்கு எதிரான 4-வது டி 20 கிரிக்கெட் போட்டியில் 6 பேட்ஸ்மேன்களுடன் விளையாட வேண்டும் என்ற திட்டத்துடன்தான் களமிறங்கினோம்.




















