
திருவனந்தபுரம்: ஜூன் 12-
கேரளாவின் கோழிக்கோட்டை சேர்ந்த ஒருவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது.
கடந்த 2018-ம் ஆண்டில் கேரளாவின் கோழிக்கோடு, மலப்புரம் பகுதிகளில் நிபா வைரஸ் பரவுவது முதல் முதலாக கண்டறியப்பட்டது. இந்த சூழலில் தற்போது கோழிக்கோட்டை சேர்ந்த 43 வயது நபருக்கு நிபா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.
கோழிக்கோடு மருத்துவக் கல்லூரியில் வென்டிலேட்டர் உதவியுடன் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவரது குடும்பத்தினரும், அவரோடு தொடர்புடையவர்களும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
இதுகுறித்து கேரள சுகாதாரத் துறை அமைச்சர் முரளிதரன் கூறும்போது, “நிபா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட நபர் முதலில் கோழிக்கோடு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெளிநோயாளியாக சிகிச்சை பெற்றுள்ளார். அதே மருத்துவமனையில் அவருக்கு எம்ஆர்ஐ ஸ்கேன் எடுக்கப்பட்டு உள்ளது. அவருக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், ஸ்கேன் எடுத்த சுகாதார ஊழியர்களை தனிமைப்படுத்தி உள்ளோம்” என்றார்.
நிபா வைரஸ் பரவலை தடுக்க அமைச்சர் முரளிதரன் தலைமையில் திருவனந்தபுரத்தில் நேற்று உயர்நிலை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
கேரளாவில் ஷிகெல்லா பாக்டீரியா தொற்று பரவி வருகிறது. அந்த மாநிலத்தின் வயநாடு பகுதியில் உள்ள பள்ளியில் ஒரு மாணவருக்கு நேற்று ஷிகெல்லா தொற்று உறுதி செய்யப்பட்டது.
அவரையும் சேர்த்து இதுவரை 9 பேர் இந்த பாக்டீரியாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வயநாடு பகுதியைச் சேர்ந்த 514 மாணவ, மாணவியர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.


















