
லக்னோ: ஜனவரி 28-
உத்தரப் பிரதேசத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத்துக்கும் சங்கராச்சாரியார் சுவாமி அவிமுக்தேஸ்வரானந்த சரஸ்வதிக்கும் இடையிலான மோதல் வலுத்துள்ளது. இந்தப் பரபரப்புக்கு நடுவே அயோத்தி அதிகாரி ஒருவர் ராஜினாமா செய்ததும் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரதமர் மோடி, முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் அரசியலமைப்புக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாகவே தாம் ராஜினாமா செய்ததாக அவர் கூறியுள்ளார். அயோத்தியில் அப்படி என்னதான் பிரச்சினை ஏற்பட்டது என்பதற்கான விவரம் பின்வருமாறு:-
சங்கராச்சார்யாவும் அவரது ஆதரவாளர்களும் கடந்த மாதம் அயோத்திக்கு சென்றனர். மக் மேளாவின் போது பிரயாக்ராஜ் சங்கமத்தில் புனித நீராட அனுமதிக்கப்படாமல் தங்களை தடுத்ததாக சங்கராச்சார்யரும் அவரது ஆதரவாளர்களும் குற்றம்சாட்டினர். ஆனால் இதனை திட்டவட்டமாக மறுத்த நிர்வாகம், கூட்டம் அதிகமாக இருந்த பகுதியில் கூட்டநெரிசல் ஏற்படும் அபாயத்தைத் தவிர்க்கவே அவரது ரத ஊர்வலத்தை தடுத்து, பிற பக்தர்களைப் போல நடைபயணமாக செல்லுமாறு கேட்டுக்கொண்டதாக தெரிவித்தது. யோகியுடன் வார்த்தை யுத்தம் இதனை ஏற்காத சங்கராச்சார்யர், தமக்கு “அவமரியாதை” ஏற்பட்டதாக கூறி எதிர்ப்பை தெரிவித்தார். இதையடுத்து அவருக்கும் யோகி ஆதித்யநாத்துக்கும் இடையே வார்த்தை யுத்தம் ஏற்பட்டது. சங்கராச்சார்யரின் பெயரை நேரடியாக குறிப்பிடாமல், ராமாயணத்தில் சந்நியாசி வேடம் அணிந்து ஸ்ரீ ஹனுமானை ஏமாற்ற முயன்ற அரக்கன் ‘காலநேமி’யை குறிப்பிட்டு, அத்தகையவர்களைப் பற்றி மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் எச்சரித்தார்.
இதற்கு பதிலடி கொடுத்த சங்கராச்சார்யர், “யோகி ஆதித்யநாத் தற்போது முதல்வர் ஆகிவிட்டார். மத விவகாரங்களை என்னைப்போன்ற சாமியார்களிடம் ஒப்படைக்க வேண்டும்” என்றார். மேலும் அவர் கூறுகையில், “முதல்வராக இருக்கும் ஒரு அரசியல்வாதி கல்வி, சுகாதாரம், சட்டம்-ஒழுங்கு அல்லது மாநிலத்தின் வளர்ச்சி குறித்து பேசாமல், காலநேமி, மதம், மதமின்மை போன்ற விஷயங்களைப் பற்றி பேசுகிறார். ராஜினாமா செய்வதாக அறிவிப்பு இது எவ்வளவு பொருத்தமானது? முதல்வர் தனது மாநிலத்தின் வளர்ச்சி, செழிப்பு குறித்து பேச வேண்டும். மதம் தொடர்பான விஷயங்களை மதத் தலைவர்களிடமே விட வேண்டும்,” என்று தெரிவித்தார். இந்தப் பரபரப்புக்கு நடுவேதான், அயோத்தி துணை ஜிஎஸ்டி ஆணையர் பிரஷாந்த் குமார் சிங், முதல்வர் யோகி ஆதித்யநாத், பிரதமர் மோடி உள்ளிட்டோருக்கு ஏற்பட்ட “அவமரியாதைக்கு” எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தாம் ராஜினாமா செய்வதாக அறிவித்தார். இது தொடர்பாக அவர் கூறுகையில், “முதல்வர், பிரதமர், உள்துறை அமைச்சர், அரசியலமைப்பு மற்றும் ஜனநாயகத்திற்கு ஆதரவாகவும், அரசு ஊழியர்களுக்கான விதிமுறைகளுக்கு இணங்கவும் நான் பதவி விலகியுள்ளேன். சமூகத்தைப் பிளவுபடுத்தும் நோக்குடன் அவிமுக்தேஸ்வரானந்த் கூறிய கட்டுப்பாடற்ற கருத்துகள் என்னை வேதனைப்படுத்தியுள்ளன,” என்றார்.
முதல்வருக்கு எதிராக தனிப்பட்ட விமர்சனங்கள் செய்யப்பட்டதாக குற்றம்சாட்டிய அவர், தொடர்ந்து, “இந்த அரசு தான் என் ‘அன்னதாதா’. நான் இதன் உப்பைச் சாப்பிட்டவன். இயந்திரம் போல் சம்பளம் வாங்கிக் கொண்டே இருப்பது என் கடமை அல்ல. யோகி ஆதித்யநாத் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர்; இந்த அவமரியாதையை நான் சகிக்க முடியாது,” என்று தெரிவித்தார். இதற்கிடையே, பல்கலைக்கழக மானியக் குழு (யூஜிசி) புதிதாக கொண்டு வந்த விதி ஒன்றைச் சார்ந்த சர்ச்சையிலும் சங்கராச்சார்யர் தலையிட்டார். அதாவது, எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி மாணவர்களிடமிருந்து வரும் புகார்களை கையாள சிறப்பு குழுக்கள், உதவி எண்கள் (ஹெல்ப்லைன்) மற்றும் கண்காணிப்பு குழுக்களை அமைப்பது தொடர்பான விதியாகும்.















