சட்டங்களுக்கு அடிபணிய மறுக்கும் எக்ஸ்; ஐகோர்ட் உத்தரவை எதிர்க்க முடிவு

பெங்களூரு, செப். 30- கர்நாடக உயர் நீதிமன்றத்தின் உத்தரவு பேச்சுரிமைக்கு அச்சுறுத்தலாக இருப்பதால், அதை எதிர்த்து மேல்முறையீடு செய்யப் போவதாக ‘எக்ஸ்’ சமூக வலைதள நிர்வாகம் அறிவித்துள்ளது. ‘எக்ஸ்’ சமூக வலைதள பக்கத்தில் இருந்து குறிப்பிட்ட சில கணக்குகள் மற்றும் பதிவுகளை முடக்குமாறு அந்நிறுவனத்துக்கு மத்திய அரசு அறிவுறுத்திஇருந்தது.சமூக வலைதளம் இதனை எதிர்த்து ‘எக்ஸ்’ சமூக வலைதளம் சார்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இவ்வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், ‘கண்காணிப்பு இல்லாமல் சமூக வலைதளங்கள் நம் நாட்டிற்குள் இயங்குவதை அனுமதிக்க முடியாது’ எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தது. இது தொடர்பாக கர்நாடக உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு: நம் நாட்டுக்குள் சமூக வலைதள நிறுவனங்கள் முறைப்படுத்தப்படாமல் இயங்குவதற்கு அனுமதி தர முடியாது. நம் நாட்டில் சேவையை தொடர விரும்பும் சமூக வலைதள நிறுவனங்கள் இதனை தெரிந்து வைத்திருப்பது அவசியம். இந்தியாவின் சட்டத்திட்டங்களை, ‘எக்ஸ்’ சமூக வலைதளம் மதிக்க வேண்டும். பேச்சுரிமைக்கான அரசியலமைப்பு பாதுகாப்பு என்பது இந்திய குடிமக்களுக்கு மட்டும் தான். வெளிநாட்டினருக்கு அதற்கான, 19வது பிரிவு பொருந்தாது.