
சென்னை: பிப்ரவரி 24-
தமிழகத்தில் ஏப்ரல் மாதம் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான அறிவிப்பு அடுத்த மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தலை சந்திப்பதற்கு அனைத்துக் கட்சிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றன. தி.மு.க. தலைமையில் ஒரு அணியும், அ.தி.மு.க. தலைமையில் இன்னொரு அணியும் களம் காண்கின்றன. விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம், சீமானின் நாம் தமிழர் கட்சி ஆகியவை தனித்து போட்டியிடுகின்றன.
இதன் மூலம் தமிழக தேர்தல் களத்தில் 4 முனை போட்டி ஏற்பட்டு இருக்கிறது.
இப்படி அரசியல் கட்சிகள் தேர்தலை சந்திக்க தீவிரமாகி வரும் நிலையில் தேர்தல் ஆணைய அதிகாரிகள் தேர்தலுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள தொடங்கி இருக்கிறார்கள். இதன்படி தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் தலைமையில் தேர்தல் ஆணைய குழுவினர் நாளை தமிழகம் வருகிறார்கள்.
இந்த அதிகாரிகள் நாளை முதல் 3 நாட்கள் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் தங்கி இருந்து சட்டசபை தேர்தலை நடத்துவதற்கானஅனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொள்கிறார்கள்.
இந்த சுற்றுப்பயணத்தின்போது தேர்தல் ஆணைய அதிகாரிகள் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் ஆலோசனை நடத்துகிறார்கள்.
இதற்கிடையே சட்டசபை தேர்தலை அமைதியான முறையில் நடத்துவதற்கான ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமிழக காவல் துறையில் உள்ள 1 லட்சத்துக்கும் அதிகமான காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட இருக்கிறார்கள்.
ஒவ்வொரு சட்டசபை தேர்தலிலும் பதட்டமான தொகுதிகளில் துணை ராணுவ படையினர் நிறுத்தப்படுவது வழக்கம்.
முதல் கட்டமாக 50 கம்பெனி துணை ராணுவ படையினர் அடுத்த மாதம் (மார்ச்) 10-ந்தேதி தமிழகம் வருகை தர உள்ளனர். இதன் பின்னர் தொடர்ச்சியாக அடுத்தடுத்து மேலும் பல கம்பெனி துணை ராணுவ படையினரும் தமிழகத்துக்கு வருகை தர இருப்பதாக தமிழக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்து இருக்கிறார்கள்.
அடுத்த மாதம் வருகை தர உள்ள துணை ராணுவ படையினர் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களுக்கும் பிரித்து அனுப்பப்பட இருக்கிறார்கள்.
இது தொடர்பாக தமிழக தேர்தல் அதிகாரிகள் கூறும்போது, தமிழகத்தை பொறுத்தவரை எப்போதுமே அமைதியான முறையில் தேர்தல் நடைபெறுவது வழக்கம். இதன் காரணமாகத்தான் மற்ற மாநிலங்களைப் போன்று இல்லாமல் தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டு வருகிறோம் என்றார்.
நாளை தமிழகம் வருகை தரும் தலைமை தேர்தல் ஆணையர் சென்னையில் தமிழக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். இதன் பிறகு அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணைய அதிகாரிகள் முக்கிய ஆலோசனை மேற்கொள்ள இருப்பது குறிப்பிடத்கத்கது.















