சபரிமலை கோவில் தங்கம் மாயமான விவகாரத்தில் புதிய திருப்பம்

திருவனந்தபுரம்: அக். 8- சபரிமலை அய்யப்பன் கோவில் தங்கம் மாயமான விவகாரத்தில், ‘தங்கக் கவசம் செப்பனிடும் பணிக்குப் பின், மிச்சமான தங்கத்தை உதவி தேவைப்படும் பெண்ணின் திருமணத்திற்கு பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும்’ என, தங்கமுலாம் பூசும் செலவை ஏற்ற தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போத்தி தேவசம் போர்டுக்கு எழுதிய கடிதம் தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இதன் மூலம் தொழிலதிபருக்கும், தேவசம் போர்டு அதிகாரிகளுக்கும் முறைகேட்டில் தொடர்பு இருக்கிறதோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது. கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூ., கட்சியை சேர்ந்த முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் இடது ஜனநாயக முன்னணி கூட்டணி ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில் உள்ள சபரிமலை அய்யப்பன் கோவில் கருவறையின் வாயிலில், இருபுறமும் உள்ள துவாரபாலகர்கள் சிலைகளில் அணிவிக்கப்பட்டு இருந்த தங்க கவசங்கள், 2019ல் கழற்றப்பட்டு, செப்பனிடுவதற்காக சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டன. எடை குறைவு செப்பனிடும் பூசும் செலவை பெங்களூரைச் சேர்ந்த தொழிலதிபர் உன்னிகிருஷ்ணன் போத்தி ஏற்றுக் கொண்டார். இதையடுத்து, சென்னையில் உள்ள அவரது ‘ஸ்மார்ட் கிரியேஷன்ஸ்’ என்ற நிறுவனத்தில் செப்பனிடும் பணி நடந்தது. இதற்காக, திருவிதாங்கூர் தேவசம் போர்டு கவசங்களை ஒப்படைத்தபோது, அதன் எடை 42.8 கிலோவாக இருந்தது. அதை செப்பனிட்டப் பின், சென்னை நிறுவனம் மீண்டும் ஒப்படைத்தபோது, அதன் எடை 38 கிலோவாக குறைந்திருந்தது. அதாவது தங்கமுலாம் பூசப்பட்ட கவசத்தில் இருந்து 4.54 கிலோ அளவுக்கு தங்கம் மாயமாகி இருந்தது. பக்தர்கள் மத்தியில் இந்த விவகாரம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உண்மையை கண்டறிய கேரள உயர் நீதிமன்றம் நேற்று முன்தினம் சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்து விசாரணைக்கு உத்தரவிட்டது. இந்நிலையில், கடந்த 2019, ஆக., 11ம் தேதி செப்பனிடப்பட்ட கவசங்களை துவாரபாலகர்கள் சிலைகளுக்கு அணிவித்த பின், தொழிலதிபர் உன்னிகிருஷ்ணனிடம் இருந்து, ‘இ – மெயில்’ வாயிலாக கடிதம் ஒன்று தேவசம் போர்டுக்கு அனுப்பப்பட்டது. அது குறித்த ஆதாரம் கேரள உயர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அந்த கடிதத்தில், உன்னிகிருஷ்ணன் போத்தி கூறியிருப்பதாவது:
விரிவான விசாரணை சபரிமலையின் கருவறை கதவு மற்றும் துவாரபாலகர்கள் சிலைகளுக்கு தங்க முலாம் பூசும் பணிகள் முடிந்த நிலையில், என்னிடம் தங்கம் மிச்சம் இருக்கிறது. உதவி தேவைப்படும் ஒரு பெண்ணின் திருமணத்திற்கு, தேவசம் போர்டு ஒத்துழைப்புடன் அந்த தங்கத்தை பயன்படுத்திக் கொள்ளலாமா? இது தொடர்பாக உங்களது மேலான கருத்துகளை வரவேற்கிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டிருந்தது. இதை படித்து பார்த்து கேரள உயர் நீதிமன்றம் அதிர்ச்சி அடைந்துள்ளது.