சரிந்த இந்திய பங்குச்சந்தை

தெஹ்ரான்: மார்ச் 2-
மத்திய கிழக்கில் போர் பதற்றம் உருவாகியுள்ள நிலையில், அது இந்தியப் பங்குச்சந்தைகளில் நேரடியாக எதிரொலித்துள்ளது. மும்பை பங்குச்சந்தை மற்றும் தேசிய பங்குச்சந்தை இரண்டுமே கடுமையான சரிவுடன் வர்த்தகமாகி வருகிறது. மத்திய கிழக்கில் கடந்த சனிக்கிழமை முதலே போர் தொடர்ந்து வருகிறது. ஒரு பக்கம் இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து ஈரானைத் தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானும் அதற்குப் பதிலடி கொடுக்கவே நிலைமை மோசமாகி வருகிறது. இதற்கிடையே மத்திய கிழக்கு போர் எதிரொலியாக இந்தியப் பங்குச்சந்தைகள் கடும் வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. மும்பை பங்குச்சந்தை சென்செக்ஸ் 1100 சரிந்து, 80,277ல் வர்த்தகமாகிறது. தேசிய பங்குச்சந்தையான நிஃப்டி 300 சரிந்து, 24,890 புள்ளிகளில் வர்த்தகமாகி வருகிறது. அதேபோல போர் காரணமாகச் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையும் 12% வரை உயர்ந்துள்ளது. இதே நிலை நீடித்தால் இந்தியாவிலும் கூட பெட்ரோல், டீசல் விலை உயரும் ஆபத்து இருக்கிறது. மேலும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பும் 24 பைசா சரிந்து, 91.32 என்ற மோசமான நிலையில் இருக்கிறது. மத்திய கிழக்கில் ஏற்பட்ட போர் பதற்றமே இதற்கு முக்கிய காரணமாகச் சொல்லப்படுகிறது.