Home மாவட்டங்கள் பெங்களூர் சாக்கடை நீர் தகராறு – பக்கத்து வீட்டுக்காரர் வெட்டிக்கொலை

சாக்கடை நீர் தகராறு – பக்கத்து வீட்டுக்காரர் வெட்டிக்கொலை

பெலகாவி: ஜூலை 17-
அண்டை வீட்டாருக்கு இடையே சாக்கடை நீர் வெளியேறுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறு முற்றி ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெலகாவி அருகே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம், கானாப்பூர் தாலுகா தோலகி கிராமத்தைச் சேர்ந்தவர் அமீர்சாப் மக்தும்சாப் பாஸ்சாப்பூர் (வயது 54). இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் அசோக் ராமப்பா உகராகோட் (29). அமீர்சாப் வீட்டு சாக்கடை நீர், அசோக் வீட்டின் பக்கமாக பாய்ந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த அசோக், சாக்கடை நீரைத் தடுப்பதற்காக மண்ணைக் கொட்டி அடைத்துள்ளார். இதுதொடர்பாக இரு வீட்டுப் பெண்களுக்கும் இடையே முதலில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
வாக்குவாதம் முற்றவே, அங்கு நின்றுகொண்டிருந்த அமீர்சாப் மற்றும் அவரது மகன் ஆதிக் ஆகியோரை அசோக் திடீரென கடப்பாரையால் (பிகாசி) சரமாரியாகத் தாக்கினார். இதில் அமீர்சாப்பின் நெஞ்சில் கடப்பாரை பாய்ந்ததில் அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். அவரை மீட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும் வழியில், இடகிக்ராஸ் அருகே அமீர்சாப் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கே.ராமராஜன் கூறும்போது, “கொலை குற்றவாளியான அசோக் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது குடும்பத்தினர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்றார். இறந்த அமீர்சாப்பின் மகன் ஆதிக் கொடுத்த புகாரின் பேரில், நந்தகட் போலீஸார் பாரதிய நியாய சன்ஹிதா சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.