சிஎஸ்கே வீரரை திட்டிய ஹர்ஷித் ராணா

ராஞ்சி, டிச. 1- இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையிலான முதல் ஒருநாள் போட்டியில், தென்னாப்பிரிக்க இளம் வீரர் டெவால்ட் பிரெவிஸ் ஆட்டமிழந்த பிறகு, இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணா அவருக்கு கொடுத்த ‘செண்ட்-ஆஃப்’ பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஹர்ஷித் ராணாவுடன் இணைந்து விராட் கோலியும் ஆக்ரோஷமாக நடந்து கொண்டார். இவர்கள் இருவர் மீதும் ஐசிசி நடவடிக்கை எடுக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. ராஞ்சியில் நடந்த இந்த போட்டியில், ரோஹித் சர்மா 57 ரன்கள், விராட் கோலி 135 ரன்கள், கே எல் ராகுல் 60 ரன்கள் எடுத்தனர். இந்தியா நிர்ணயித்த 350 ரன்கள் இலக்கை நோக்கி தென்னாப்பிரிக்கா ஆடியது. போட்டியின் 2-வது ஓவரிலேயே டி காக் மற்றும் ரிக்கல்டன் ஆகிய இருவரையும் வீழ்த்தி ஹர்ஷித் ராணா மிரட்டினார். ஈகோவை சீண்டிய ‘நோ-லுக்’ சிக்ஸர் தென்னாப்பிரிக்கா அணி 11 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து மோசமான நிலையில் இருந்தது. அப்போது களமிறங்கிய பிரெவிஸ் போட்டியை மாற்றினார். ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக ஆடும் டெவால்ட் பிரெவிஸ் அதிரடியாக ஆடி 37 ரன்கள் சேர்த்தார். குறிப்பாக 20-வது ஓவரில் ஹர்ஷித் ராணா பந்துவீச்சில், பிரெவிஸ் பந்தை பார்க்காமல் ஸ்டைலாக சிக்ஸரை விளாசினார். பவுலரைப் பார்க்காமலே அவர் அடித்த அந்த சிக்ஸர், ஹர்ஷித் ராணாவின் ஈகோவை காயப்படுத்தியது. அடுத்த ஓவரிலேயே இதற்கு ராணா பதிலடி கொடுத்தார். பிரெவிஸுக்கு எதிராக தொடர்ந்து 3 டாட் பந்துகளை வீசி நெருக்கடி கொடுத்தார். 4-வது பந்தில் தூக்கி அடிக்க முயன்ற பிரெவிஸ், ருதுராஜ் கெய்க்வாட்டிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். விக்கெட்டை வீழ்த்திய மகிழ்ச்சியில் துள்ளிக்குதித்த ஹர்ஷித் ராணா, பெவிலியன் திரும்பிய பிரெவிஸைப் பார்த்து விரலை ஆட்டி, சில தகாத வார்த்தைகளைப் பேசி ஆக்ரோஷமாக வழியனுப்பி வைத்தார். இது கிரிக்கெட் விதிமுறைப்படி தவறான ஒரு ‘செண்ட்-ஆஃப்’ ஆகும். ஹர்ஷித் ராணா மட்டுமல்ல, அவருக்கு ஆதரவாக சீனியர் வீரர் விராட் கோலியும் களத்தில் ஆக்ரோஷமாக நடந்து கொண்டார். விக்கெட் விழுந்ததும் ஓடி வந்த கோலி, ராணாவுடன் இணைந்து வெறித்தனமாகக் கொண்டாடினார். இளம் வீரர் பிரெவிஸை நோக்கி இவ்வளவு ஆக்ரோஷம் தேவையா என்று வர்ணனையாளர்களே கேள்வி எழுப்பினர். ஐபிஎல் தொடரில் ஏற்கனவே ‘பிளையிங் கிஸ்’ கொடுத்து தடை பெற்றவர் ஹர்ஷித் ராணா. தற்போது சர்வதேச போட்டியிலும் பேட்ஸ்மேனை நோக்கி ஆக்ரோஷமாகப் பேசியது மற்றும் சைகை காட்டியது ஐசிசி நடத்தை விதிமுறைகளை மீறிய செயலாகக் கருதப்படுகிறது. இதனால் ஹர்ஷித் ராணாவுக்கு அபராதம் அல்லதுத் தண்டனைப் புள்ளிகள் (Demerit points) வழங்கப்பட அதிக வாய்ப்புள்ளது. இப்போட்டியில் ஹர்ஷித் ராணா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி இந்தியாவின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.