சிறந்த இயக்குநருக்கான விருதை வென்ற அனுபர்ணா

வெனிஸ், செப்டம்பர் 8- இத்தாலியில் நடந்த வெனிஸ் திரைப்பட விழாவில், சிறந்த இயக்குநருக்கான விருதை வென்று, இந்தியாவைச் சேர்ந்த பெண் இயக்குநர் அனுபர்ணா ராய் சாதனை படைத்துள்ளார். ஐரோப்பிய நாடான இத்தாலியில் உள்ள வெனிஸ் நகரில், 82வது வெனிஸ் திரைப்பட விழா சமீபத்தில் நடந்தது. இதில், ‘ஓரிசோன்டி’ என்ற சிறப்பு பிரிவில், தன் முதல் திரைப்படமான, சாங்ஸ் ஆப் பர்காட்டன் ட்ரீஸ் படத்திற்காக, சிறந்த இயக்குநருக்கான விருதை, நம் நாட்டைச் சேர்ந்த பெண் இயக்குநர் அனுபர்ணா ராய் வென்றார். இந் த பிரிவில் விருது வென்ற முதல் இந்திய இயக்குநர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார். பிழைப்புக்காக வேறிடத்தில் இருந்து மஹாராஷ்டிராவின் மும்பைக்கு வேலை தேடி வந்த இரண்டு பெண்களின் வாழ்க்கை அனுபவங்களை, சாங்ஸ் ஆப் பர்காட்டன் ட்ரீஸ் படம் பேசுகிறது. இதில், நடிகையர் நாஸ் ஷேக், சுமி பாகேல் நடித்துள்ளனர். முதல் படத்திலேயே விருது வென்று, பலரையும் இயக்குநர் அனுபர்ணா ராய் ஆச்சரியப்படுத்தி உள்ளார்.