சிறந்த ஊழியர்களுக்கு கார், பைக்

சென்னை: ஏப் 28-சென்னையில் இயங்கி வரும் ஐடி நிறுவனம் ஒன்றில் சிறப்பாக பணியாற்றிய ஊழியர்களுக்கு கார், பைக் மற்றும் தங்கம், வெள்ளி நாணயங்கள் பரிசாக வழங்கி கவுரவிக்கப்பட்டது. கரோனா தொற்று பரவலுக்கு பிறகு உலகின் பல முன்னணி நிறுவனங்கள் ஆட்குறைப்பு நடவடிக்கையை மேற்கொள்ளும் சூழலில் இந்த ஐடி நிறுவனத்தின் முயற்சி ஊழியர்களுக்கு ஊக்கம் தரும் விதமாக அமைந்துள்ளது.சென்னை – ஈக்காட்டுதாங்கலில் கடந்த 15 ஆண்டுகளாக இயங்கி வருகிறது ஜெனோவெக்ஸ் டெக்னாலஜிஸ் (Xenovex) என்ற தகவல் தொழில்நுட்ப நிறுவனம். இந்த நிறுவனத்தில் சுமார் 250 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
இந்நிலையில், இந்நிறுவனத்தில் பல ஆண்டுகள் சிறந்த முறையில் பணியாற்றி வரும் ஊழியர்களை கவுரவிக்கும் விதமாக அண்மையில் மதுரவாயலில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில், ஊழியர்கள் அனைவரும் தங்களது குடும்பத்தினருடன் கலந்துகொண்டனர்.
இந்த பாராட்டு விழாவில் நிறுவனத்தின் ஜெனோவெக்ஸ் டெக்னாலஜிஸ் இயக்குனர்கள் ஆனந்தன் சண்முகம், பிரபாகர் மற்றும் சிவக்குமார் ஆகியோர் அனைவரையும் வரவேற்றுப் பேசினர். தொழிலதிபர் சுரேஷ் சம்பந்தம் சிறப்பு விருந்தினராக வருகை தந்து, 10 முதல் 15 ஆண்டுகள் பணியாற்றி வரும் சிறந்த ஊழியர்கள் 6 பேருக்கு, ஒரு கார் மற்றும் 5 பைக்குகளை பரிசாக வழங்கி பாராட்டினார்.