சீனாவுடன் வர்த்தக போர் நிறுத்தம் டிரம்ப் திடீர் அறிவிப்பு

வாஷிங்டன்; ஆக.12-
சீனாவுடனான வர்த்தக போர் நிறுத்தத்தை மேலும் 90 நாட்கள் நீட்டிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவின் அதிபராக பதவியேற்றது முதல் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வரும் டிரம்ப், கிட்டத்தட்ட 90க்கும் மேற்பட்ட நாடுகளுக்கான இறக்குமதி வரியை உயர்த்தினார். ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை இந்தியா கொள்முதல் செய்வதாக கூறி 50 சதவீதம் வரை வரி உயர்த்துவதாக அறிவித்தார்.
ஆனால், இந்தியாவை விட அதிகம் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யும் சீனாவுக்கு அதிக வரியை விதிக்காதது ஏன் என்று கேள்விகள் எழுந்தன. இந் நிலையில் சீனா மீதான வரியை 90 நாட்களுக்கு தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அதிபர் டிரம்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த விவரத்தை அவர் தமது ட்ரூத் சோஷியல் மீடியா பதிவில் வெளியிட்டு உள்ளார். அதில் டிரம்ப் கூறி உள்ளதாவது;
சீனா மீதான வரி இடைநீக்கத்தை மேலும் 90 நாட்களுக்கு நீட்டிப்பது என்ற உத்தரவில் நான் கையெழுத்திட்டு உள்ளேன். ஒப்பந்தத்தில் ஏற்கனவே குறிப்பிட்டுள்ள அனைத்து கூறுகளும் அப்படியே இருக்கும். இந்த விவகாரத்தில் உங்கள் அனைவருக்கும் எனது நன்றி.
இவ்வாறு டிரம்ப் தமது பதிவில் குறிப்பிட்டு இருக்கிறார்.