ஹைதராபாத்: டிசம்பர் 2 –
சீனா, ஜப்பான்தான் எங்களது போட்டியாளர்கள், ஆந்திரா அல்ல என்று தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.
`2047-க்குள் தெலங்கானாவை வளர்ச்சி பெற்ற மாநிலமாக எழுப்புவோம்’ என்ற பெயரில் தொலைநோக்குத் திட்டத்தை முதல்வர் ரேவந்த் ரெட்டி நேற்று ஹைதராபாத்தில் வெளியிட்டார்.
Vision 2047பின்னர் செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: 2047-க்குள் தெலங்கானாவை மிகவும் வளர்ச்சி பெற்ற மாநிலமாக மாற்றுவதே எங்களது இலக்கு. அதற்கான முதல்படிதான் இந்த 2047 விஷன் திட்டம். சீனா, ஜப்பான், தென் கொரியா, சிங்கப்பூர் போன்ற நாடுகள் வளர்ச்சி பெற்று இருப்பதைப் போலவே தெலங்கானாவை மாற்ற இந்த பரந்த திட்டத்தை உருவாக்கியுள்ளோம். தென் கொரியா, சிங்கப்பூர், சீனா, ஜப்பான் ஆகிய நாடுகள்தான் எங்களது போட்டியாளர்கள். ஆந்திரா, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களை நாங்கள் போட்டியாளர்களாக கருதவில்லை. ஆசிய பொருளாதார வல்லரசு நாடுகளுக்கு எதிராக தெலங்கானா அரசு தனது அளவுகோலை நிர்ணயித்து வருகிறது. அந்த நாடுகளைப் போலவே தெலங்கானாவின் வளர்ச்சியை பன்மடங்காக அதிகரிப்போம். நாட்டின் வளர்ச்சியில் 10% வளர்ச்சி தெலங்கானாவிலிருந்து செல்ல வேண்டும் என்ற நோக்கத்தில் இதை தயாரித்துள்ளோம். தொலைநோக்கு பார்வை மற்றும் அதை செயல்படுத்தி அணுகும்விதத்தில் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் வரும் 8,9ம் தேதிகளில் ஹைதராபாத்தில் நடைபெறும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யப்படும். இந்தத் திட்டமானது நிதி ஆயோக் மற்றும் இந்தியன் ஸ்கூல் ஆஃப் பிசினஸ்(ஐஎஸ்பி) ஆகியவற்றுடன் இணைந்து விரிவாகத் தயாரிக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ ரயில் திட்டத்தை விரிவாக்கம் செய்தல், புதிதாக பாரத் ஃபியூச்சர் சிட்டியை அமைத்தல், புதிய பசுமைப்பாதை நெடுஞ்சாலை அமைத்தல், மச்சிலிப்பட்டினத்தை இணைக்கும் வகையில் புல்லட் ரயில் திட்டம் போன்ற திட்டங்கள் அதில் அடங்கியுள்ளன. மேலும் மாநிலத்தில் புதிதாக மேலும் சில விமான நிலையங்களை அமைக்க முடிவு செய்துள்ளோம். வாராங்கல், அடிலாபாத், கொத்தகுடேம், ராமகுண்டம் போன்ற இடங்களில் விமானநிலையங்களை அமைப்பதற்கான திட்டம் தயாரிக்கப்பட்டு வருகிறது. நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள், விமான நிலையங்கள் தான் மாநிலத்துக்கு அதிக அளவிலான வெளிநாட்டை முதலீட்டை கொண்டு வரும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.














