சீன விசாவுக்கு லஞ்சம்: காங்., எம்.பி., கார்த்திக்கு சிக்கல்

புதுடில்லி, டிச. 24- சீன விசா பணமோசடி வழக்கில், காங்., – எம்.பி., கார்த்தி மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்ய டில்லி சி.பி.ஐ., நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. ‘வேதாந்தா’ குழுமத்தைச் சேர்ந்த டி.எஸ்.பி.எல்., நிறுவனம், கடந்த 2011ல் பஞ்சாபில் அனல்மின் நிலையம் அமைத்தது. இந்த பணிகளுக்காக, சீன ஊழியர்கள் 263 பேருக்கு விதிமீறி விசா வாங்க முயன்றது. இதற்காக அப்போதைய மத்திய உள்துறை அமைச்சராக இருந்த சிதம்பரத்தின் மகன் கார்த்தியை அணுகியதாக கூறப்படுகிறது. அவருக்கு நெருக்கமாக இருந்த பாஸ்கரராமன் என்பவர் மூலம், 50 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்று, சீன ஊழியர்களுக்கு விசா பெற்று கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக, 2020ல் வழக்கு பதிந்து விசாரணை நடத்திய சி.பி.ஐ., கடந்த 2022ல் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில், தற்போதைய சிவகங்கை தொகுதி காங்., – எம்.பி., கார்த்தி, அவரது உதவியாளர் பாஸ்கரராமன், விரால் மேத்தா, அனுப் அகர்வால், மன்சூர் சித்திக் மற்றும் சேத்தன் ஸ்ரீவஸ்தவா ஆகியோரது பெயர்கள் சேர்க்கப் பட்டன.