அடிலெய்டு, அக். 23- ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முக்கியமான இரண்டாவது ஒருநாள் போட்டிக்கு முன்னதாக, இந்திய அணியின் புதிய கேப்டன் சுப்மன் கில்லுக்கு விரும்பத்தகாத அனுபவம் ஒன்று ஏற்பட்டுள்ளது. அடிலெய்டு நகரில் சக வீரருடன் நடந்து சென்றுகொண்டிருந்தபோது, பாகிஸ்தான் ரசிகர் ஒருவர் அவரிடம் கைகுலுக்கிவிட்டு, முகத்திற்கு நேராக கோஷமிட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் 0-1 என்ற கணக்கில் பின்தங்கியுள்ள இந்திய அணி, தொடரை சமன் செய்யும் நோக்கில் அடிலெய்டில் இன்று இரண்டாவது போட்டியில் களமிறங்குகிறது. இந்நிலையில், நேற்று நடைபெற்ற விருப்பப் பயிற்சி முகாமில் கேப்டன் சுப்மன் கில் கலந்துகொள்ளவில்லை. அதற்குப் பதிலாக, அவர் வேகப்பந்து வீச்சாளர் ஹர்ஷித் ராணாவுடன் அடிலெய்டு நகரைச் சுற்றிப் பார்க்கச் சென்றார். அப்போது, பாகிஸ்தானைச் சேர்ந்த ரசிகர் ஒருவர் சுப்மன் கில்லை அடையாளம் கண்டுகொண்டு அவரிடம் பேச வந்துள்ளார். கைகுலுக்குவதற்காக அவர் தனது கையை நீட்டியபோது, கில்லும் சற்றும் யோசிக்காமல் அவருடன் கைகுலுக்கினார். ஆனால், அடுத்த கணமே அந்த ரசிகர், கில்லின் முகத்திற்கு மிக அருகில் “பாகிஸ்தான் ஜிந்தாபாத்” என்று ஆக்ரோஷமாகக் கத்தினார். இந்த எதிர்பாராத செயலால் சுப்மன் கில் எந்தவிதமான எதிர்வினையும் ஆற்றவில்லை. கோபத்தையோ, அதிர்ச்சியையோ வெளிக்காட்டாமல், அமைதியாக அந்த இடத்திலிருந்து நகர்ந்து சென்றார். இந்த நிகழ்வு முழுவதும் வீடியோவாகப் பதிவு செய்யப்பட்டு, சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. கில்லின் மௌனம் தந்த பதிலடி அந்த ரசிகரின் ஆத்திரமூட்டும் செயலுக்கு சுப்மன் கில் காட்டிய நிதானமும், அமைதியும் பலரது பாராட்டுகளைப் பெற்று வருகிறது. எந்தவித சலனமும் இல்லாமல் அவர் நடந்து சென்றதை “அவரது மௌனமே தகுந்த பதிலாக இருந்தது” என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர். ஒரு கேப்டனுக்குரிய முதிர்ச்சியுடன் அவர் இந்தச் சூழலைக் கையாண்டதாகப் பலரும் பாராட்டியுள்ளனர்.



















