சுமுக உடன்பாடு: மணிப்பூர் மாநிலத்தில் அமைதி திரும்புகிறது

இம்பால்: செப்.5-
மைதே​யி, குகி குழுக்​கள் மற்​றும் மத்​திய அரசு இடையே சுமுக உடன்​பாடு எட்​டப்​பட்டு உள்​ளது. இதைத் தொடர்ந்து தேசிய நெடுஞ்​சாலையை திறக்க குகி நிர்​வாகக் குழு ஒப்​புக் கொண்​டுள்​ளது. அந்த மாநிலத்​தில் விரை​வில் அமைதி திரும்​பும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது. கடந்த 2023-ம் ஆண்டு மே மாதம் மணிப்​பூரில் மைதே​யி, குகி சமு​தா​யத்​தினர் இடையே மோதல் ஏற்​பட்​டது. மாநிலம் முழு​வதும் கலவரம் வெடித்து 258 பேர் உயி​ரிழந்​தனர்.
1,108 பேர் காயமடைந்​தனர். 400 தேவால​யங்​கள், 132 இந்து கோயில்​கள் சேதப்​படுத்​தப்​பட்​டன. சுமார் 60,000-க்​கும் மேற்​பட்​டோர் இடம்​பெயர்ந்​தனர். கடந்த 3 ஆண்​டு​களுக்​கும் மேலாக மணிப்​பூரில் வன்​முறை நீடித்து வரு​கிறது. வரும் 13-ம் தேதி பிரதமர் நரேந்​திர மோடி மணிப்​பூர் மாநிலத்​துக்கு செல்ல இருப்​ப​தாக தகவல்​கள் வெளி​யாகி உள்​ளன.
இந்த சூழலில் குகி சமு​தா​யத்​தின் நிர்​வாக குழு​வான குகி சோ கவுன்​சில், மைதேயி சமு​தா​யத்​தின் நிர்​வாக குழு​வான ஐக்​கிய மக்கள் முன்​னணி ஆகிய​வற்​றின் மூத்த நிர்​வாகி​களு​டன் மத்​திய உள்​துறை அமைச்சக மூத்த அதி​காரி​கள் பேச்​சு​வார்த்தை நடத்தினர். இதில் சுமுக உடன்​பாடு எட்​டப்​பட்​டது.
இதுகுறித்து மத்​திய உள்​துறை அமைச்​சகம் நேற்று வெளி​யிட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: மணிப்​பூரில் குகி சமு​தாயத்தின் தலைமை அமைப்​பான குகி சோ கவுன்​சில், மைதேயி சமு​தா​யத்தை சேர்ந்த நிர்​வாக அமைப்​பான ஐக்​கிய மக்​கள் முன்​னணி​யின் மூத்த நிர்​வாகி​களு​டன் மத்​திய உள்​துறை அமைச்சக மூத்த அதி​காரி​கள் கடந்த சில நாட்​களாக டெல்​லி​யில் பேச்​சு​வார்த்தை நடத்​தினர். இதில் சுமுக உடன்​பாடு எட்​டப்​பட்​டது.
இதன்​படி தேசிய நெடுஞ்​சாலை 2-ஐ திறக்க குகி சோ கவுன்​சில் ஒப்​புக் கொண்​டிருக்​கிறது. இதன்​மூலம் மணிப்​பூரில் தடையற்ற வர்த்தக போக்​கு​வரத்து தொடங்​கும். தேசிய நெடுஞ்​சாலை 2-ல் பணி​யாற்​றும் பாது​காப்​புப் படை வீரர்​களுக்கு குகி சோ கவுன்​சில் முழு ஒத்​துழைப்பு வழங்​கும். குகி சோ கவுன்​சில், ஐக்​கிய மக்​கள் முன்​னணி, மத்​திய அரசு இடையே முத்​தரப்பு அமைதி ஒப்​பந்​தம் கையெழுத்​தாகி உள்​ளது. இதன்​படி மணிப்​பூரில் அமை​தியை நிலை நாட்ட அனைத்து தரப்​பினரும் உறுதி அளித்​துள்​ளனர்.
கிளர்ச்​சிக் குழுக்​களிடம் இருக்​கும் ஆயுதங்​களை அரு​கில் உள்ள சிஆர்​பிஎப், பிஎஸ்​எப் முகாம்​களில் ஒப்​படைக்க உத்​தர​விடப்​பட்டு உள்​ளது. மணிப்​பூரில் சில வெளி​நாட்​டினர் ஊடுருவி சட்​டம் ஒழுங்கை சீர்​குலைக்​கும் வகை​யில் செயல்​பட்டு வரு​வ​தாக புகார்​கள் எழுந்​துள்​ளன. அவர்​கள் மீது கடும் நடவடிக்கை எடுக்​கப்​படும். கிளர்ச்​சிக் குழுக்​களின் முகாம்​கள் மூடப்​படும். இவ்​வாறு அதில் கூறப்​பட்டு உள்​ளது.
மணிப்​பூர் போலீஸ் வட்​டாரங்​கள் கூறிய​தாவது: மணிப்​பூரின் பள்​ளத்​தாக்கு பகு​தி​களில் மைதேயி சமு​தாய மக்​கள் பெரும்​பான்​மை​யாக வசிக்​கின்​றனர். மலைப் பகு​தி​களில் குகிசமு​தாய மக்​கள் பெரும்​பான்​மை​யாக உள்​ளனர். கடந்த 2023-ம் ஆண்டு மோதலுக்கு பிறகு இரு சமு​தாய மக்​களும் எதிரெ​திர் அணி​களாக செயல்​பட்​டனர். எனவே மத்​திய அரசு சார்​பில் இரு தரப்​பினருடனு​ம் அமை​திப் பேச்​சு​வார்த்தை நடத்​தப்​பட்​டது. இதில் சுமுக உடன்​பாடு எட்​டப்​பட்டு உள்​ளது. முதல்​கட்​ட​மாக மைதே​யி, குகி, மத்​திய அரசு இடையே அமைதி ஒப்​பந்​தம் ஏற்​படுத்​தப்​பட்டு உள்​ளது. மணிப்​பூரில் விரை​வில்​ அமை​தி திரும்​பும்​. இவ்​வாறு அந்த​ வட்​டாரங்​கள்​ தெரிவித்​தன.