
மும்பை: ஏப்ரல் 13-
திங்கள்கிழமை இந்திய பங்குச் சந்தைகள் கடுமையான வீழ்ச்சியுடன் தொடங்கின. சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி ஆகிய இரண்டும் சுமார் இரண்டு சதவீதம் வீழ்ச்சியை சந்தித்து முதலீட்டாளக்களுக்கு பெரும் அதிர்ச்சி கொடுத்தது. கிஃப்ட் நிஃப்டி 1 சதவீதம் மட்டுமே குறைந்திருந்த நிலையில் சென்செக்ஸ், நிஃப்டி 2 சதவீதம் வரையில் சரிந்துள்ளது. இன்றைய வர்த்தக சரிவுக்கு அமெரிக்கா – ஈரான் மத்தியில் உருவாகியுள்ள பதற்றம் மிகவும் மையமானது என்றாலும், பங்குச்சந்தை சரிவு மோசமான நிலைக்கு செல்ல பல்வேறு காரணங்கள் உள்ளது.
சென்செக்ஸ், நிஃப்டி சரிவு ஆசிய பங்குச்சந்தைக்கு இணையாக இந்திய பங்கு சந்தைகளும் வாரத்தின் தொடக்க நாளிலேயே கடுமையான சரிவுடன் திறந்தன. சென்செக்ஸ் சுமார் 1,700 புள்ளிகள் சரிந்து 75,868 அளவுக்கு வந்தது, நிப்டி 50 குறியீடு 500 புள்ளிகளுக்கு மேல் விழுந்து 23,555 கீழ் சரிந்தது. சந்தை அதிர்வை அளவிடும் இந்தியா VIX 13% க்கும் மேல் உயர்ந்து 21 அளவைத் தாண்டியது. இந்த வீழ்ச்சி தனிப்பட்ட சில பங்குகளில் மட்டும் அல்லாமல், மொத்த சந்தையையும் பாதித்தது. அமெரிக்கா – ஈரான் மத்தியில் போர் நிறுத்தம் ஏற்படாமல் 2 வார போர் நிறுத்தம் முடிந்த பின்பு மீண்டும் தாக்குதல் துவங்கினால் பங்குச்சந்தை கூடுதலாக பாதிப்பு அடையவும் வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. முக்கிய பங்குகள் மற்றும் முக்கிய துறைகள் காலை வர்த்தகத்தில் சென்செக்ஸ் குறியீட்டில் இருக்கும் 30 நிறுவனங்களும் பெரும் சரிவை சந்தித்து மோசமான நிலைக்கு தள்ளப்பட்டு உள்ளது. இதில் முக்கியமாக பஜாஜ் பைனான்ஸ், ஏசியன் பெயின்ட்ஸ், பஜாஜ் பின்சர்வ், மாருதி சுசூகி, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, இண்டிகோ, ரிலையன்ஸ், ஹெச்டிஎப்சி, டிசிஎஸ், மஹிந்திரா ஆகியவை 1-4 சதவீதம் வரையிலான சரிவை பதிவு செய்தது. 30 நிறுவனங்களின் பட்டியலில் NTPC மட்டுமே லாபத்தில் வர்த்தகமாகி வருகிறது.
PSU வங்கி, ரியல் எஸ்டேட், ஆட்டோ மற்றும் கன்ச்யூமர் டியூரபிள்ஸ் துறைகள் 2-3% வரை சரிந்ததால், மொத்த சந்தையிலும் பாதிப்பு அதிகரித்தது. மிட்கேப் மற்றும் ஸ்மால்கேப் குறியீடுகளும் 2% க்கும் மேல் வீழ்ச்சி கண்டன. இன்றைய சரிவுக்கு முக்கியமான காரணங்கள்.
இன்றைய வர்த்தகத்தில் ஆசிய சந்தைகள் முழுவதும் வீழ்ச்சி காணப்பட்டன. ஜப்பான், தென் கொரியா, ஹாங்காங் சந்தைகள் 1% க்கும் மேல் சரிந்தன. இதன் தாக்கமாக இந்திய ரூபாயும் பலவீனமடைந்து, டாலருக்கு எதிரான ரூபாய மதிப்பு 93.31 வரை சரிந்தது. அதே நேரத்தில் அமெரிக்க பத்திர முதலீட்டில் கிடைக்கும் லாப அளவுகள் உயர்ந்ததால், உலகளாவிய முதலீடுகள் இந்திய பங்குச் சந்தையில் இருந்து வெளியேற வாய்ப்பு அதிகரித்துள்ளது.



















