
சென்னை: டிசம்பர் 3-
டிட்வா புயல் வலுவிழந்தாலும் சென்னை அருகே கரையை கடப்பதன் காரணமாக, சென்னை, புறநகரில் மழை கொட்டித்தீர்த்தது. இதனால், பல இடங்களில் மழை நீர் சூழ்ந்து, வெள்ளக்காடானது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
வங்கக்கடல் மற்றும் அதை யொட்டிய வடதமிழகம், புதுச்சேரிகடலோரப்பகுதியில் நிலை கொண்டிருந்த டிட்வா புயல் கடந்த 30-ம் தேதி வலுவிழந்து, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறியது. இது நேற்று அடுத்தடுத்து வலுவிழந்து காற்றழுத்த தாழ்வு பகுதியாக சென்னை அருகே நிலைகொண்டிருந்தது.
இது, சென்னை அருகே கரையை கடப்பதன் காரணமாக, சென்னை மற்றும் புறநகரில் பல்வேறு இடங்களில் நேற்று முன்தினம் முதல் நேற்று இரவு வரை மிதமான மழை முதல் கனமழை வரை விட்டுவிட்டு பெய்தது.
குறிப்பாக, சென்னை அண்ணாசாலை, மெரினா, சாந்தோம், மயிலாப்பூர், எம்ஆர்சி நகர், வேளச்சேரி, பட்டாளம் உள்பட பல்வேறு இடங்களில் நேற்று மழை பெய்தது.
இதனால், பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியது. வேளச்சேரி, பட்டாளம் பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகளில் தண்ணீர் தேங்கியது. வியாசர்பாடி கணேசபுரத்தில் உள்ள சுரங்கப்பாதையில் தண்ணீர் தேங்கியது. இதனால், அந்தவழியாக போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது.
கொரட்டூர் ஓம்சக்தி நகரில் தாழ்வான பகுதியில் மழை நீர்சூழ்ந்தது. கொரட்டூர் வாட்டர் கேனல் சாலை, பெரம்பூர் பிரதான சாலையில் முழுமையாக தண்ணீர் தேங்கி காணப்பட்டது. இங்கும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபோல, இங்குள்ள பேருந்து நிலையம், பாரதி நகரில் மழை நீர் சூழ்ந்திருந்தது.
கோடம்பாக்கம் ரங்கராஜபுரம் பாலத்தில் அப்பகுதி மக்கள் தங்கள் கார்களை எடுத்து வந்து நிறுத்தினர். இதுபோல, வேளச்சேரி, ராயபுரம் பகுதியிலும் பலர் தங்கள் கார்களை பாலங்களில் நிறுத்தினர். மெரினா கடற்கரை சர்வீஸ் சாலையில் மழை நீர் தேங்கியது. மணற்பரப்பில் தண்ணீர் தேங்கி குளம் போல் காட்சி அளித்தது.
இதனால், கடற்கரைக்கு செல்ல 3-வது நாளாக நேற்றும் தடைவிதிக்கப்பட்டது. தி.நகரில் உள்ள சாலைகளில் மழை நீர் வெள்ளம்போல் ஓடியது.
கோடம்பாக்கம், வடபழனி, ஆற்காடு சாலை, பவர் ஹவுஸில் பல இடங்களில் மழை நீர் தேங்கியது. மழை காரணமாக, தாம்பரம் ஜிஎஸ்டி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதுபோல, போரூரை அடுத்த வேலப்பன்சாவடி பகுதியில் மழை வெள்ளத்தில் சிக்கிய கார் மற்றும் வேன், கிரேன் உதவியுடன் மீட்கப்பட்டன. திருவொற்றியூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகாலை முதல் விட்டுவிட்டு மழை பெய்தது. இதனால். மக்கள் வீட்டை விட்டு வெளியே வரமுடியாமல் முடங்கினர். செங்குன்றம் குமரன்நகர் பகுதியில் 100-க்கும் மேற்பட்ட வீடுகளை மழை வெள்ளம் சூழ்ந்தது.இதனால், அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்பட்டனர். மழை நீர்தேங்கிய இடங்களில் மாநகராட்சி ஊழியர்கள், தண்ணீரை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனர். தொடர்மழையால், மக்களின் இயல்பு வாழ்க்கை முழுமையாக பாதிக்கப்பட்டது. சென்னையில் 48 இடங்களில் விழுந்த மரங்களை போலீஸார் மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.முகாம்களில் உணவு விநியோகம் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக, சென்னையில் 215 முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டன. கடந்த நவ.30-ம் தேதி 32,500 சிற்றுண்டிகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.டிச.1-ம் தேதி மதியம் 91,600 பேருக்கு உணவு தயாரித்து வழங்கப்பட்டன. இரவு 1.54 லட்சம் பாக்கெட் உணவுகள் தயாரிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகிக்கப்பட்டன. இதையடுத்து நேற்று 2.23 லட்சம் உணவு பொட்டலங்கள் தயாரித்து பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.

















