
சென்னை: ஆக. 30 –
தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய், அடுத்த மாதம் மக்கள் சந்திப்பு பயணத்தை துவக்குகிறார். பயணத்தின்போது, அவர் தங்குவதற்காக, அறை கொடுக்க, ஹோட்டல்கள் தயக்கம் காட்டுகின்றன.
அண்ணாதுரை பிறந்த நாளான வரும் செப்.,15ல், தமிழகம் முழுதும், ‘மக்கள் சந்திப்பு பயணம்’ என்ற பெயரில் தன் பிரசார பயணத்தை துவக்க, த.வெ.க., தலைவர் விஜய் திட்டமிட்டுள்ளார்.
முதல் கட்டமாக, 100 சட்டசபை தொகுதிகளுக்கு செல்கிறார். அதற்கேற்ப சுற்றுப்பயண திட்டத்தை, அவரது அரசியல் ஆலோசனைக் குழு தயார் செய்துள்ளது.
விஜயின் சுற்றுப்பயணத்தை டெல்டா மாவட்டங்களில் துவக்க திட்டமிடப்பட்டுள்ளது.
திருச்சி அல்லது நாகப்பட்டினத்தில், மக்கள் சந்திப்பு பயணத்தின்போது, அவரது பாதுகாப்பு பணிகளை மேற்கொள்வது குறித்து, விஜய் தரப்பில், மத்திய மண்டல போலீஸ் உயர் அதிகாரியிடம் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.
மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணத்தின் போது, நட்சத்திர ஹோட்டல்களில் விஜய் தங்கினால், அவரை பார்ப்பதற்காக, பொதுமக்கள் கூட்டம், குவியும். அவர்களை கட்டுப்படுத்துவது போலீசாருக்கு சிரமம் ஏற்படும்.
மேலும், கூட்டம் குவிந்தால், ஹோட்டலுக்கும், அதில் தங்கியிருக்கும் மற்றவர்களுக்கும் நெருக்கடி ஏற்படும் என காரணங்களை கூறி, ஹோட்டல் நிர்வாகத்தினர், விஜய் தங்குவதற்கு அறைகளை வழங்குவதில் தயக்கம் காட்டுகின்றனர்.
எனவே, ஹோட்டலில் தங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டால், கேரவேனில் விஜய் தங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விஜய் சுற்றுப்பயணத்திற்காக, பிரத்யேக பிரசார வேன் தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் ‘லிப்ட்’ வசதி செய்யப்பட்டுள்ளது. ‘ரோடு ஷோ’ மக்களை சந்திக்கும்போது, அவர்கள் அளிக்கும் கோரிக்கை மனுக்களை பெற்று, அதன் வாயிலாக தேர்தல் அறிக்கை தயாரிக்கவும், ஒவ்வொரு தொகுதியிலும், ‘ரோடு ஷோ’ நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. மாவட்டத் தலைநகரங்களில், பொதுக்கூட்டத்தில் விஜய் பேசவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.