சேலத்தில் தங்க நகை அணியாமல் இரவில் பெண்கள் வைத்த கன்னி பொங்கல்

சேலம்: ஜனவரி 16-
சுமங்கலி பெண்கள் பொங்கல் பூஜை கூடையை தலையில் சுமந்து, தாலி, வளையல், தோடு ஆபரணங்களை வீட்டின் பூஜை அறையில் வைத்துவிட்டு, கன்னி கோலத்தில் ஊர்வலமாக சென்று சூரிய உதயத்துக்கு முன்பு பொங்கல் வைத்த நிகழ்வு, சேலத்தின் கவனத்தை பெற்று வருகிறது.. இந்த பொங்கலின் சிறப்பு என்ன? சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே நத்தக்கரை கிராமத்தில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த நல்லசேவன் கோவில் உள்ளது. இங்கு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை திருவிழா நடத்தப்படுவது வாடிக்கையாகும்..சேலம் மாவட்டம் நத்தக்கரை, பெரியேரி, நாமக்கல் மாவட்டம், ஆயில்பட்டி, பெரம்பலுார் மாவட்டம், வாலிகண்டபுரம், விழுப்புரம் மாவட்டம், தென்பொன்பரப்பி, மட்டியக்குறிச்சி ஆகிய கிராம மக்கள் ஒன்று சேர்ந்து நடத்துவார்கள்…
இந்த விழாவில், திருமணமான கிராம பெண்கள், நகை எதுவும் அணியாமல், வெள்ளை நிற ஆடை அணிந்து, விதவை கோலத்தில் பொங்கல் வைத்து வினோதமான முறையில் வழிபாடு நடத்தும் பழக்கத்தை பல ஆண்டுகளாக கடைபிடித்து வருகின்றனர்… நத்தக்கரை கிராமம் இந்த பொங்கல் விழாவில், திருமணமான புகுந்த வீட்டு பெண்களே கலந்து கொள்ள வேண்டும் என்பது ஐதீகம். இந்த வித்தியாசமான பொங்கல் விழா சூரிய உதயத்துக்கு முன்னர் நடத்துவதையும் கிராம மக்கள் பல ஆண்டுகளாக கடைபிடித்து வருகின்றனர்.
அந்த வகையில், நேற்றைய தினம் சிறப்பு பொங்கல் நடத்தப்பட்டது.. இந்த விழாவிற்கு அருகிலுள்ள நத்தக்கரை, பெரியேரி கிராமங்கள் மற்றும் கள்ளக்குறிச்சி, நாமக்கல், பெரம்பலூர் பகுதிகளின் பக்தர்களும் கலந்தனர். மக்களின் சொற்படி, மாரியம்மன் கோவிலிலிருந்து நல்லசேவன் கோவிலுக்குச் ஊர்வலமாக சென்று, நள்ளிரவு நேரத்தில் அந்த சிறப்பு வழிபாடு ஆரம்பமாகியது.