
புதுடெல்லி, ஜூன் 16- அரசுமுறை பயணமாக பிரதமர் மோடி நேற்று சைப்ரஸ் நாட்டுக்கு புறப்பட்டு சென்றார். சைப்ரஸ், கனடா, குரேஷியா ஆகிய நாடுகளில் அவர் 5 நாள் பயணம் மேற்கொள்கிறார்.ஜம்மு காஷ்மீரின் பஹல்காமில் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 26 சுற்றுலா பயணிகள் கொல்லப்பட்டனர். அதற்கு பதிலடியாக, பாகிஸ்தானில் உள்ள விமானப்படை தளங்கள் மற்றும் தீவிரவாத முகாம்கள் மீது இந்தியா தாக்குதல் நடத்தியது. இதை தொடர்ந்து, இந்தியாவின் பல்வேறு கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் குழுவினர் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் சென்று, பாகிஸ்தானின் எல்லை தாண்டிய தீவிரவாதம் குறித்து நேரடியாக விளக்கம் அளித்தனர்.
இந்நிலையில், பஹல்காம் தாக்குதலுக்கு பிறகு முதல்முறையாக பிரதமர் மோடி வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ளார்.இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: சர்வதேச அளவில் உள்ள பிரச்சினைகள் குறித்து கருத்துகளை பரிமாறிக்கொள்ள, கனடாவில் நடைபெறும் ஜி7 மாநாடு இடமளிக்கும் என்று நம்புகிறேன். ஜி7 மாநாட்டின்போது பல்வேறு நாட்டு தலைவர்களை சந்திக்க ஆர்வமாக இருக்கிறேன். மேலும், இந்தியாவின் தீவிரவாத எதிர்ப்புக்கு ஆதரவு அளித்த நாடுகளுக்கு நன்றி தெரிவிக்க ஒரு வாய்ப்பாகவும் எனது பயணம் அமையும். குறிப்பாக, சைப்ரஸ் நாடு இந்தியாவுடன் மிக நீண்ட காலமாகவே நல்லுறவுடன் இருக்கிறது. இந்தியாவுடன் நட்பு நாடாகவும், மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பிய யூனியனில் மிக முக்கிய நாடாகவும் உள்ளது. இந்த நாட்டுடனான வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, தொழில்நுட்பம், பரஸ்பரம் பொதுமக்கள் சந்திப்பு போன்றவற்றை மேம்படுத்த எனது பயணம் மிகவும் உதவும்.
குரேஷிய அதிபர் ஜோரன் மிலனோவிக், பிரதமர் ஆண்ட்ரேஜ் பிளன்கோவிக் ஆகியோரையும் சந்திக்க உள்ளேன். இந்தியாவும், குரேஷியாவும் 100 ஆண்டுகளுக்கு மேல் நெருங்கிய கலாச்சார உறவுகளை கொண்டுள்ளது. இந்திய பிரதமர் என்ற முறையில் முதல்முறையாக குரேஷியா செல்வதால், அந்த நாட்டுடன் புதிய அத்தியாயம் தொடங்கப்படும். இருதரப்பு உறவுகளை மேம்படுத்த இந்த பயணம் உதவும். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.