ஜிஎஸ்டி கூட்டத்தில் முக்கிய முடிவு – அத்தியாவசிய பொருட்கள் விலை குறையும்

டெல்லி: செப். 3-
ஜிஎஸ்டி கவுன்சிலின் 56வது கூட்டம் இன்றும் நாளையும் டெல்லியில் நடைபெற உள்ளது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த இருநாள் கூட்டத்திற்கு தலைமை தாங்குவார். இதில், வரி விகிதங்களை மாற்றுதல், வரி இணக்க நடைமுறைகளை எளிதாக்குதல் உள்ளிட்ட இந்தியாவின் அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி தனது சுதந்திர தின உரையில், சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) நாட்டிற்கு எவ்வாறு பயனளித்துள்ளது என்பதை எடுத்துரைத்தார். ஜிஎஸ்டியின் அடுத்த தலைமுறை சீர்திருத்தங்களின் முக்கியத்துவத்தை அவர் அப்போது வலியுறுத்தினார். இது பொது மக்கள், விவசாயிகள், நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கு (MSMEs) நிவாரணம் அளிக்கும் என்றும் மோடி குறிப்பிட்டிருந்தார். ஜிஎஸ்டி வரியில் மாற்றம் அடுத்த தலைமுறை ஜிஎஸ்டி சீர்திருத்தங்கள் தீபாவளி அன்று வெளியிடப்பட உள்ளன. அத்தியாவசியப் பொருட்களுக்கான வரிகளைக் குறைத்து, உள்ளூர் விற்பனையாளர்கள் மற்றும் நுகர்வோருக்கு இவை பலன் அளிக்கும். தற்சார்பு இந்தியாவை உருவாக்கும் நோக்கில், மத்திய அரசு கடந்த மாதம் கூடி விவாதித்த அமைச்சர்கள் குழுவிடம் ஜிஎஸ்டியில் குறிப்பிடத்தக்க சீர்திருத்தங்களை முன்மொழிந்துள்ளது. இந்த சீர்திருத்தங்கள் மூன்று முக்கிய தூண்களை அடிப்படையாகக் கொண்டவை: கட்டமைப்பு சீர்திருத்தங்கள், விகிதங்களை நெறிப்படுத்துதல் மற்றும் எளிமையான வரி முறை ஆகும்.
டெல்லியில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு, மத்திய அரசு கிட்டத்தட்ட 175 பொருட்களின் மீதான சரக்கு மற்றும் சேவை வரியை (ஜி.எஸ்.டி) குறைக்க திட்டமிட்டுள்ளது. வரவிருக்கும் சீர்திருத்தங்களின் ஒரு பகுதியாக, ஜி.எஸ்.டி-யை குறைந்தது 10 சதவீத புள்ளிகள் குறைக்கப்படலாம் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.