புதுடெல்லி, செப்டம்பர் 4- ஜிஎஸ்டி வரிவிகித மாற்றத்தின்படி, தற்போதுள்ள 5%, 12%, 18%, 28% ஆகிய நான்கு வரி அடுக்குகள் 18%, 5% என இரு அடுக்குகளாக குறைக்கப்பட்டுள்ளது.
செப்.22 முதல் நடைமுறைக்கு வரும் இந்த மாற்றத்தால் விலை குறையும், விலை உயரும் பொருட்களின் பட்டியலைப் பார்ப்போம். மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சிலின் 56-வது கூட்டம் புதன்கிழமை டெல்லியில் தொடங்கியது.
இதில் ஜிஎஸ்டி மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இந்த அறிவிப்பை வெளியிட்ட நிர்மலா சீதாராமன், வரும் 22-ம் தேதி முதல் 5% மற்றும் 18% என இரண்டு அடுக்குகளின் கீழ் மட்டுமே ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்படும் என்று தெரிவித்தார்.
ஏற்கெனவே இருந்த 5%, 12%, 18% மற்றும் 28% ஜிஎஸ்டி அடுக்குகளில் 12% மற்றும் 28% நீக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்கள், ஆடம்பர பொருட்களுக்கு 40% சிறப்பு வரி வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஜிஎஸ்டி வரி மறுசீரமைப்பு நடவடிக்கை மக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் மீதான நிதி சுமையை பெரிய அளவில் குறைக்கும் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.
குறிப்பாக அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி 5% என மாற்றப்பட்டுள்ளது. இதனால் பல்வேறு பொருட்களின் விலை வரும் 22-ம் தேதி முதல் குறையும்.
இது மக்களுக்கு நேரடியாக பலன் தரும் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும், ஆடம்பரப் பொருட்களுக்கு கூடுதல் வரி வசூலிக்கப்படும் என ஜிஎஸ்டி கவுன்சிலில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சூழலில் ஜிஎஸ்டி மறுசீரமைப்பு அறிவிப்பால் விலை குறையும் மற்றும் உயரும் பொருட்கள் பட்டியல் இதோ… விலை குறையும் பொருட்கள்: > பால் பொருட்கள்: யு.எச்.டி பாலுக்கு இப்போது வரி விலக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கன்டன்ஸ்டு மில்க், வெண்ணெய், நெய், பனீர், பாலாடைக்கட்டி உள்ளிட்ட பொருட்கள் 12%-லிருந்து 5%-ஆக குறைந்துள்ளது. > மால்ட், ஸ்டார்ச், பாஸ்தா, கார்ன்ஃப்ளேக்ஸ், பிஸ்கட், சாக்லெட்டுகள் மற்றும் கோகோ பொருட்கள் 12% அல்லது 18%-லிருந்து 5%-ஆக குறைக்கப்படும். > பேரீச்சம்பழம் மாதிரியான உலர்ந்த பழங்கள், பாதாம், பிஸ்தா, முந்திரி உள்ளிட்ட பொருட்கள் மீதான வரி 12%-லிருந்து 5%-ஆக குறையும் > சர்க்கரை பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி 5%-ஆக மாற்றப்பட்டுள்ளது. > தாவர எண்ணெய், விலங்கு கொழுப்பு, இறைச்சி மற்றும் மீன் தயாரிப்பு பொருட்கள் மீதான ஜிஎஸ்டி 5%-ஆக அறிவிக்கப்பட்டுள்ளது. > மிக்சர் உள்ளிட்ட சாப்பிட தயாராக இருக்கும் பேக் செய்யப்பட்ட பொருட்கள் மீதான ஜிஎஸ்டி 18%-லிருந்து 5%-ஆக குறைக்கப்பட்டுள்ளது.
இதில் வறுக்கப்பட்ட பருப்புகள் சேராது. > சர்க்கரை அல்லது சுவை சேர்க்கப்பாடாத தண்ணீர், மினரல் வாட்டர் மீதான வரி 18%-லிருந்து 5%-ஆக மாற்றப்பட்டுள்ளது. > விவசாய பொருட்கள்: விவசாய இடு பொருட்கள் மீதான வரியும் குறைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் உரங்கள், விதைகள் உள்ளிட்ட பொருட்கள் மீதான வரி 12% அல்லது 18%-லிருந்து 5%-ஆக மாற்றப்பட்டுள்ளது. > உயிர்காக்கும் மருந்துகள், மருத்துவ சாதனங்கள் மற்றும் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரி 12% அல்லது 18%-லிருந்து 5%-ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.
Home செய்திகள் தேசிய செய்திகள் ஜிஎஸ்டி 2.0: செப்.22 முதல் விலை குறையும், உயரும் பொருட்களின் முழு விவரம்
















