
சென்னை: பிப். 27- ஐசிசி டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றில் நேற்று சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் நடப்பு சாம்பியான இந்தியா, ஜிம்பாப்வே அணிகள் மோதின. அரை இறுதி வாய்ப்பை பெற வேண்டுமானால் இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்றாக வேண்டும் என்ற நெருக்கடியில் களமிறங்கிய இந்திய அணி பேட்டிங் செய்தது. இந்திய அணியில் வாஷிங்டன் சுந்தர், ரிங்கு சிங் ஆகியோர் நீக்கப்பட்டு அக்சர் படேல், சஞ்சு சாம்சன் சேர்க்கப்பட்டனர். பேட்டிங்கை தொடங்கிய இந்திய அணிக்கு சஞ்சு சாம்சன் அதிரடி தொடக்கம் கொடுத்தார். நரவா வீசிய 2-வது பந்தில் சஞ்சு சாம்சன் சிக்ஸரும், அடுத்த பந்தில் பவுண்டரியும் விரட்டினார். இதனால் முதல் ஓவரில் 13 ரன்கள் சேர்க்கப்பட்டன. முசாராபானி வீசிய அடுத்த ஓவரில் சஞ்சு சாம்சன் சிக்ஸர் விளாசினார். டினோடென்டா மபோசா வீசிய 3-வது ஓவரில் அபிஷேக் சர்மா 3 பவுண்டரிகள், ஒரு சிக்ஸரை விளாசினார்.
சஞ்சு சாம்சன் தனது பங்குக்கு ஒரு பவுண்டரி விரட்ட இந்த ஓவரில் மட்டும் 23 ரன்கள் குவிக்கப்பட்டன. மட்டையை சுழற்றிய சஞ்சு சாம்சன் 15 பந்துகளில், 2 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரியுடன் 24 ரன்கள் எடுத்த நிலையில் முசாராபானி பந்தை டீப் மிட்விக்கெட் திசையில் விளாசிய போது ரியான் பரூலிடம் கேட்ச் ஆனது. முதல் விக்கெட்டுக்கு சஞ்சு சாம்சன், அபிஷேக் சர்மா ஜோடி 3.4 ஓவர்களில் 48 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து களமிறங்கிய இஷான் கிஷன், அபிஷேக் சர்மாவுடன் இணைந்து மட்டையை சுழற்றினார். பிராடு இவான்ஸ் வீசிய 5-வது ஓவரில் அபிஷேக் சர்மா தலா ஒரு பவுண்டரி, சிக்ஸர் பறக்கவிட்டார். ரிச்சர்டு நரவா வீசிய அடுத்த ஓவரில் இஷான் கிஷன் 2 பவுண்டரிகளை விரட்ட அபிஷேக் சர்மா கடைசி பந்தில் சிக்ஸர் பறக்கவிட்டார்.


















