ஜில்லென மாறிய தமிழகம்- ஊட்டியில் உறைபனி

சென்னை: டிசம்பர் 20-
நாடு முழுவதும் குளிர் அலையின் தாக்கம் அதிகமாக இருக்கிறது. தமிழ்நாட்டிலும் இதன் தாக்கம் எதிரொலித்திருக்கிறது. இந்நிலையில், இன்று நீலகிரியில் உறைபனி ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இது தொடர்பாக விடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பில், “கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று (டிச.20) தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகாலை வேளையில் ஓரிரு இடங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்.
நாளை (டிச.21) முதல் 24 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும். டிச.25ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறைந்தபட்ச வெப்பநிலை பற்றிய முன்னறிவிப்பு: 24 மணி நேர குறைந்தபட்ச வெப்பநிலை மாறுதலை பொறுத்தவரை, இன்று முதல் டிச.23 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலையில் பொதுவாக பெரிய மாற்றம் ஏதுமில்லை. எனினும், சற்று குறையக்கூடும்.
இன்று முதல் டிச.23 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் குறைந்தபட்ச வெப்பநிலை ஒருசில இடங்களில் 2-4* செல்சியஸ் இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும்.
இன்று தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தில் ஒரிரு இடங்களில் இரவு அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது.