ஜேசன் ஹோல்டர் புதிய சாதனை

மும்பை, டிச. 31- மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் கேப்டன் ஜேசன் ஹோல்டர், டி20 கிரிக்கெட்டில் பெரும் சாதனை ஒன்றைப் படைத்துள்ளார். 2025 ஆம் ஆண்டில் ஒரு குறிப்பிட்ட காலண்டர் ஆண்டில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர் என்ற உலக சாதனையை முறியடித்தார். ஆப்கானிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் ரஷீத் கானின் நீண்டகால சாதனையை ஹோல்டர் முறியடித்துள்ளார்.
34 வயதான ஹோல்டர், 2025 ஆம் ஆண்டில் ஆறு கிரிக்கெட் அணிகளுக்காக 69 டி20 போட்டிகளில் விளையாடி, 97 பேட்ஸ்மேன்களை அவுட் செய்துள்ளார். இந்த ஆறு அணிகளில் மேற்கிந்தியத் தீவுகள் அணியும் அடங்கும்.இதன் மூலம் 2018 ஆம் ஆண்டு ரஷீத் கான் 61 டி20 போட்டிகளில் எடுத்த 96 விக்கெட்டுகளை விட ஒரு விக்கெட் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. ஹோல்டரின் அணிகள் பட்டியலில் அபுதாபி நைட் ரைடர்ஸ், இஸ்லாமாபாத் யுனைடெட், குல்னா டைகர்ஸ், லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ், செயின்ட் கிட்ஸ் அண்ட நெவிஸ் பேட்ரியாட்ஸ் மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் ஆகியவை அடங்கும். சர்வதேச டி20 போட்டிகளில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக மட்டும் இதுவரை 87 போட்டிகளில் 97 விக்கெட்டுகளை ஹோல்டர் எடுத்துள்ளார்.
இதற்கு முன், ஒரு ஆண்டில் அதிக டி20 விக்கெட்டுகளை வீழ்த்திய சாதனை ரஷீத் கான் வசம் இருந்தது. அவர் 2018 இல் அடிலெய்ட் ஸ்ட்ரைக்கர்ஸ், ஆப்கானிஸ்தான், டர்பன் ஹீட், ஐசிசி உலக XI, காபூல் ஸ்வானான், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், சசெக்ஸ் உள்ளிட்ட ஏழு அணிகளுக்காக விளையாட்டி 96 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார். ஒரு குறிப்பிட்ட ஆண்டில் அதிக டி20 விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் பட்டியலில் ஹோல்டர் மற்றும் ரஷீத் கானுக்கு அடுத்தபடியாக டுவைன் பிராவோ (87 விக்கெட்டுகள்) மற்றும் நூர் அகமது (86 விக்கெட்டுகள்) உள்ளனர்.
2025 ஆம் ஆண்டில் ஹோல்டரின் செயல்திறன் மிகவும் அபாரமாக இருந்தது. மேற்கிந்தியத் தீவுகள் அணிக்காக 23 சர்வதேச டி20 போட்டிகளில் 31 விக்கெட்டுகளையும், ILT20 லீக்கில் அபுதாபி நைட் ரைடர்ஸ் அணிக்காக 18 போட்டிகளில் 29 விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார். மேலும், கரீபியன் பிரீமியர் லீக்கில் செயின்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணிக்காக 10 போட்டிகளில் 13 விக்கெட்டுகளையும், மேஜர் லீக் கிரிக்கெட்டில் லாஸ் ஏஞ்சல்ஸ் நைட் ரைடர்ஸ் அணிக்காக 8 போட்டிகளில் 9 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் இஸ்லாமாபாத் யுனைடெட் அணிக்காக 8 போட்டிகளில் 15 விக்கெட்டுகளை சாய்த்தார்.