
புதுடெல்லி: பிப்ரவரி 26-
இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில், 10 கோடி ஃபாலோயர்களை பெற்ற முதல் அரசியல்வாதி என்ற சாதனையை பிரதமர் மோடி படைத்துள்ளார். இன்ஸ்டாகிராமில் பிரதமர் நரேந்திர மோடியை 100 மில்லியன் பேர் பின்தொடர்கின்றனர்.
தற்போதைய தொழில்நுட்ப உலகில், மக்களின் அன்றாட வாழ்வில் சமூக வலைதளங்கள் இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக், ட்விட்டர் தளங்களை பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை பயன்படுத்துகின்றனர்.
2014 ஆம் ஆண்டு இன்ஸ்டாகிராமில் இணைந்த பிரதமர் நரேந்திர மோடி, தொடர்ந்து இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ் ஆக இருந்து வருகிறார். தற்போது இன்ஸ்டாகிராம் சமூக வலைதளத்தில், 100 மில்லியன், அதாவது 10 கோடி பாலோயர்ஸை கடந்த முதல் அரசியல்வாதி மற்றும் உலகத் தலைவர் என்ற பெருமையை பிரதமர் மோடி பெற்றுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் 43.2 மில்லியன் ஃபாலோயர்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோ 15 மில்லியன் ஃபாலோயர்ஸ் உடன் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளனர். பிரேசில் அதிபர் 14.4 மில்லியன் ஃபாலோயர்ஸ் உடன் நான்காவது இடத்தையும், துருக்கி அதிபர் தையிப் எர்டோகன் 11.6 மில்லியன் ஃபாலோயர்ஸ் உடன் 5வது இடத்தையும் பிடித்துள்ளனர். அர்ஜென்டினா அதிபர் ஜேவியர் மிலேய் 6.4 மில்லியன் ஃபாலோயர்களைக் கொண்டுள்ளனர்.
பட்டியலில் அடுத்ததாக இருக்கும் ஐந்து முக்கிய உலகத் தலைவர்களின் மொத்த ஃபாலோயர்களின் எண்ணிக்கை, பிரதமர் மோடியின் ஃபாலோயர்ஸ் எண்ணிக்கையை விட குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியாவைப் பொறுத்தவரை, பிரதமர் மோடிக்கு அடுத்த இடத்தில் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் 16.1 மில்லியன் ஃபாலோயர்ஸ் உடன் இரண்டாவது இடத்தில் உள்ளார். காங்கிரஸ் எம்.பியும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி 12.6 மில்லியன் ஃபாலோயர்ஸ் உடன் மூன்றாவது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.














