
ஹாசன்: ஆக. 23:
மூன்று வயது குழந்தை விளையாடிக்கொண்டே டிராக்டரின் சாவியை ‘ஆன்’ செய்ததால், டிராக்டர் சக்கரம் ஏறி தந்தை கொடூரமாக உயிரிழந்த சம்பவம் ஹொளேநரசீபுராவின் கோட்டே ஒக்கலிகர் தெருவில் நடந்துள்ளது.
டிராக்டர் ஏறி உயிரிழந்தவர் யஷ்வந்த் (37). இவர் அரசுப் போக்குவரத்துக்கழக ஊழியராக அரகல்கூடு பணிமனையில் பணியாற்றி வந்தார்.புதிய வீடு கட்டி வந்த யஷ்வந்த், வரமகாலட்சுமி பண்டிகை நாளன்று கான்கிரீட் போடுவதற்காக டிராக்டரில் சென்டரிங் பொருட்களை வரவழைத்திருந்தார். அப்போது தனது குழந்தையை விளையாட வைப்பதற்காக டிராக்டர் மீது உட்கார வைத்திருந்தார்.
குழந்தை விளையாடிக்கொண்டே டிராக்டர் சாவியை திருப்பியதால், டிராக்டர் திடீரென முன்னோக்கி நகர்ந்தது. குழந்தை கீழே விழுந்துவிடும் என்ற பதற்றத்தில், அதை காப்பாற்ற ஓடிவந்த யஷ்வந்த் மீது டிராக்டர் சக்கரம் ஏறியது.
படுகாயமடைந்த அவர் ஹாசன் மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். செய்தி அறிந்தவுடன் ஹொளேநரசீபுரா நகர காவல் துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்று ஆய்வு நடத்தி, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












