
மெல்பர்ன், அக். 31- இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான 2-வது டி20 கிரிக்கெட் போட்டி மெல்பர்ன் நகரில் இன்று பிற்பகல் 1.45 மணிக்கு நடைபெறுகிறது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் வினையாடுவதற்காக ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. கான்பெராவில் நேற்று முன்தினம் நடைபெற்ற முதல் டி20 போட்டி மழை காரணமாக பாதியில் கைவிடப்பட்டது. இந்நிலையில் 2-வது டி20 போட்டி மெல்பர்னில் இன்று நடைபெறுகிறது. இரு அணியிலும் மாற்றங்கள் இருப்பதற்கான வாய்ப்புகள் குறைவு என்றே கருதப்படுகிறது.
கான்பெரா போட்டியில் சூர்யகுமார் யாதவ், ஷுப்மன் கில் ஆகியோர் பேட்டிங்கில் அதிரடியாக விளையாடினார்கள். சூர்யகுமார் யாதவ் 24 பந்துகளில் 39 ரன்கள் விளாசி பார்முக்கு திரும்பி இருப்பது அணிக்கு பலம் சேர்க்கக்கூடும். ஜோஷ் ஹேசில்வுட் பந்தில் அவர் 125 மீட்டர் தூரம் சிக்ஸர் விளாசியது அனைவரையும் வெகுவாக கவர்ந்திருந்தது. அந்த ஆட்டத்தில் அபிஷேக் சர்மாவும் அதிரடியாக ஆட்டத்தை தொடங்கிய போதிலும் விரைவாக தனது விக்கெட்டை பறிகொடுத்து இருந்தார். இன்றைய ஆட்டத்தில் அவர்களிடம் இருந்து சிறப்பான மட்டை வீச்சு வெளிப்படக்கூடும். திலக் வர்மா, ஷிவம் துபே, சஞ்சு சாம்சன் ஆகியோரும் பேட்டிங்கில் வலுசேர்க்கக்கூடும். பந்துவீச்சில் ஜஸ்பிரித் பும்ரா தொடக்க ஓவர்களில் ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங் வரிசைக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிக்கக்கூடும். அக்சர் படேல், வருண் சக்ரவர்த்தி, குல்தீப் யாதவ் ஆகியோரை உள்ளடக்கிய சுழல் கூட்டணி நடு ஓவர்களில் ஆஸ்திரேலிய அணியின் ரன் குவிப்பை கட்டுப்படுத்துவதில் கவனம் செலுத்தக்கூடும். ஆஸ்திரேலிய அணியும் இந்தியாவை போன்றே டி20 போட்டிகளில் அதிரடியாக விளையாடும் பாணியை கடைபிடித்து வருகிறது. பேட்டிங்கில் அந்த அணியில் மிட்செல் மார்ஷ், டிராவிஸ் ஹெட், டிம் டேவிட், ஜோஷ் இங்லிஷ், மிட்செல் ஓவன், ஜோஷ் பிலிப், மார்கஸ் ஸ்டாயினிஸ் ஆகியோர் பேட்டிங்கில் வலுசேர்க்கக்கூடியவர்கள். இவர்கள் இந்திய அணியின் பந்துவீச்சு துறைக்கு சவால் அளிக்கக்கூடும். பந்துவீச்சில் ஜோஷ் ஹேசில்வுட், சேவியர் பார்ட்லெட், மேத்யூ குனேமன், நேதன் எலிஸ் ஆகியோர் இந்திய பேட்டிங் வரிசைக்கு அழுத்தம் கொடுக்க முயற்சிக்கக்கூடும். இதற்கிடையே இன்றைய போட்டி நடைபெறும் மெல்பர்ன் நகரில் மழைப்பொழிவு இருக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது. இதனால் போட்டி பாதிக்கப்படக்கூடும். இந்த போட்டியை காண்பதற்கு 90 ஆயிரம் ரசிகர்கள் மைதானத்தில் திரள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
 
