
புதுடெல்லி, ஜூன் 22- டி20 கிரிக்கெட் போட்டிகளில் மேற்கு இந்தியத் தீவுகளைச் சேர்ந்த வீரர் கைரன் பொல்லார்ட் அதிக ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளார். அமெரிக்காவின் டல்லாஸ் நகரில் நேற்று எம்ஐ நியூயார்க், வாஷிங்டன் பிரீடம் அணிகளுக்கு இடையிலான மேஜர் லீக் டி20 போட்டி நடைபெற்றது. முதலில் விளையாடிய வாஷிங்டன் பிரீடம் அணியினர் 5 விக்கெட் இழப்புக்கு 245 ரன்கள் குவித்தனர். பின்னர் விளையாடிய எம்ஐ நியூயார்க் அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 215 ரன்கள் எடுத்து 30 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது. இதில் எம்ஐ நியூயார்க் அணியைச் சேர்ந்த வீரர் கைரன் பொல்லார்ட் 56 பந்துகளில் 100 ரன்கள் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த போட்டியின்போது டி20 போட்டிகளில் அதிக ரன்கள் குவித்திருந்த கிறிஸ் கெயிலின் சாதனையை முந்தினார் பொல்லார்ட். கிறிஸ் கெயில் 14,562 ரன்கள் எடுத்திருந்தார். தற்போது பொல்லார்ட் 736 போட்டிகளில் விளையாடி 14,582 ரன்கள் குவித்து முதலிடத்துக்கு முன்னேறினார். அலெக்ஸ்ஹேல்ஸ் 14,449 ரன்களுடன் 3-வது இடத்திலும், ஜாஸ் பட்லர் 14,371 ரன்களுடன் 4-வது இடத்திலும் உள்ளனர்.





















