அபுதாபி: நவம்பர் 21-
டெல்லியை போல அரபு நாடுகளிலும் கடுமையான பனி மூட்டம் ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக துபாயில் அமைந்துள்ள உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீஃபா, பனி மூட்டத்தால் முற்றிலும் மறைக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாக்களில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. ஐக்கிய அரபு அமீரகம் ஒரு பாலைவன நாடு. இருப்பினும் இங்கு பனி மூட்டம் இயல்பான ஒன்றுதான். குறிப்பாக துபாயில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் தொடங்கி மார்ச் வரை பனிமூட்டம் இருக்கும்.
கடுமையான பனிமூட்டம் அப்படித்தான் இந்த ஆண்டும் பனிமூட்டம் தொடங்கியிருக்கிறது. பனிமூட்டம் காரணமாக புர்ஜ் கலீஃபா போன்ற உயரமான கட்டிடங்கள் பனியில் மறைந்திருக்கின்றன. இது தொடர்பான வீடியோவை சோஷியல் மீடியாவில் பதிவிட்டு, பனி குளிருக்கு புர்ஜ் கலீஃபா தூங்குகிறது என்று சிலர் கமெண்ட் செய்திருக்கின்றனர். இன்னும் சிலர், வடிவேலு டயலாக் போல, “எங்கடா இங்கிருந்த புர்ஜ் கலீஃபாவை காணோம்” என்றும் கமென்ட் செய்திருக்கின்றனர். இந்தியர்கள் டெல்லியுடன் இந்த பனி மூட்டத்தை ஒப்பிட்டு, துபாய் இன்று டெல்லி ஆகிவிட்டது என்று கூறியிருக்கின்றனர். ரெட் அலர்ட் நேற்றைய தினம் அதிக அளவு பனி மூட்டம் இருந்ததாக ஐக்கிய அமீரகத்தின் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. பனிமூட்டம் குறித்து ரெட் அலர்ட்டும் கொடுக்கப்பட்டிருக்கிறது. பனிமூட்டம் காரணமாக ஓட்டுநர்கள் மிகுந்த கவனமாக இருக்க வேண்டும் என்று எச்சரிக்கையும் விடுக்கப்பட்டிருக்கிறது. இதுகுறித்து துபாய் காவல்துறை விடுத்துள்ள எச்சரிக்கையில், “துபாயின் சில பகுதிகளில் நிலவும் பனிமூட்டத்தால், குறைந்த பார்வைத் திறன் சூழல் இருக்கிறது.எனவே வாகன ஓட்டிகள் பாதுகாப்பாகவும் கவனமாகவும் வாகனங்களை இயக்க வேண்டும்” என அறிவுறுத்தியிருக்கிறது.



















