
புதுடெல்லி: பிப்ரவரி 21
டெல்லியில் நடைபெறும் செயற்கை நுண்ணறிவு உச்சி மாநாட்டில் நேற்று காங்கிரஸ் தொண்டர்கள் மேலாடையை களைந்து போராட்டம் நடத்தினர்.
கடந்த 16-ம் தேதி தலைநகர் டெல்லியில் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உச்சி மாநாடு தொடங்கியது. இந்த மாநாடு ஒட்டுமொத்த உலகத்தின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது.
இந்த சூழலில் 5-வது நாளாக நேற்று ஏஐ உச்சி மாநாடு நடைபெற்றது. அப்போது இளைஞர் காங்கிரஸை சேர்ந்த சிலர் அரங்கம் 5-ல் திடீரென நுழைந்தனர். பிரதமர் நரேந்திர மோடி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் புகைப்படங்கள் அச்சிடப்பட்ட டி சர்ட்களை அவர்கள் அணிந்திருந்தனர். அந்த டி சர்ட்களில், இந்திய, அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம், எப்ஸ்டீன் பைல் உள்ளிட்ட வாசகங்கள் இருந்தன.
திடீரென இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் டி சர்ட்டை களைந்து பிரதமர் மோடிக்கு எதிராகவும் இந்திய, அமெரிக்க வர்த்தக ஒப்பந்தத்துக்கு எதிராகவும் கோஷமிட்டனர். போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தொண்டர்களை டெல்லி போலீஸார் கைது செய்து அங்கிருந்து அப்புறப்படுத்தினர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.பாஜக கண்டனம்: மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், “இந்தியாவின் புகழுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் காங்கிரஸ் தொண்டர்கள் ஏஐ உச்சி மாநாட்டில் போராட்டம் நடத்தி உள்ளனர். அவர்களது நடவடிக்கையை இந்தியா மட்டுமல்ல, ஒட்டுமொத்த உலகமும் பார்த்தது’’ என்று தெரிவித்துள்ளார்.
















