டெல்லி: ஆகஸ்ட் 5-
நாட்டின் தலைநகர் செங்கோட்டையில் அடுத்த வாரம் சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக டெல்லியில் பாதுகாப்பு பலமடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே சுதந்திர தினத்தை முன்னிட்டு நடத்தப்பட்ட பாதுகாப்பு ஒத்திகையில் போலி வெடிகுண்டுகள் செங்கோட்டைக்குள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது. இது பரபரப்பை கிளப்பியுள்ள நிலையில், இது தொடர்பாகப் பாதுகாப்புப் படையினர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். நாட்டின் 79ஆவது சுதந்திர தினம் அடுத்த வாரம் கொண்டாடப்பட உள்ளது. எப்போதும் சுதந்திர தினத்தன்று பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் உள்ள செங்கோட்டையில் தேசியக் கொடி ஏற்றுவார். மேலும், அங்கிருந்தபடி அவர் நாட்டு மக்களிடையே உரையாற்றுவார். இந்த நிகழ்ச்சியில் பல்வேறு தரப்பினரும் முக்கிய தலைவர்களும் கலந்து கொள்வார்கள். இதையொட்டி டெல்லி செங்கோட்டையில் சுதந்திர தினக் கொண்டாட்டத்திற்கு முன்னதாக பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. இதில் காவல்துறையின் சிறப்புப் பிரிவு ஒரு குழுவுடன் போலி வெடிகுண்டுகளைக் கோட்டைக்குள் எடுத்துச் சென்றுள்ளனர். போலீஸ் கெடுபிடிகளைத் தாண்டி போலி வெடிகுண்டுகள் எடுத்து செல்லப்பட்டனர். இந்த பயிற்சி இன்று காலை நடந்துள்ளது. செங்கோட்டையில் பாதுகாப்பு குறைபாட்டிற்காக பணியிலிருந்த ஏழு காவலர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டு, விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து டிசிபி ராஜா பந்தியா பாதுகாப்பு நடவடிக்கைகளை மேலும் பலப்படுத்த உத்தரவிட்டுள்ளார். பிரதமர் ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தினத்தன்று தேசியக் கொடியை செங்கோட்டையில் இருந்து தான் ஏற்றி, உரையாற்றுவார். இதனால் சுதந்திர தினத்திற்கு முன்னதாக செங்கோட்டை உயர் பாதுகாப்பு மண்டலமாக இருக்கும்.. இந்த நிகழ்வில் பிரதமர் தொடங்கிப் பல முக்கிய அரசியல் தலைவர்கள் கலந்து கொள்வார்கள்.
















