
கோவை: நவ. 14-
டெல்லி கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் கைதானவர்கள் கோவைக்கு வந்து சென்றனரா என்று போலீஸார் விசாரித்து வருகின்றனர். டெல்லியில் செங்கோட்டை அருகே கடந்த 10-ம் தேதி கார் குண்டு வெடித்ததில் 13 பேர் உயிரிழந்தனர்.கோவையில் 2022-ல் இதேபோல கார் வெடித்துச் சிதறியது. இதில் காரை ஓட்டிச்சென்ற ஜமேசா முபின்(28) என்பவர் உயிரிழந்தார். விசாரணையில், அவருக்கும் ஐ.எஸ். பயங்கரவாத இயக்கத்துக்கும் தொடர்பு இருந்தது தெரியவந்தது.
அவரது வீட்டில் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், கோவை சம்பவம் தொடர்பாக 18 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கை என்ஐஏ அதிகாரிகள் தீவிரமாக விசாரித்து வருகின்றனர். இந்நிலையில், டெல்லி கார் வெடிப்பு சம்பவத்தில் கைதானவர்களிடம் என்ஐஏ அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையே, அந்த கும்பல் கோவை வந்து சென்றுள்ளார்களா என்பது குறித்து என்ஐஏ அதிகாரிகளிடம், கோவை மாநகர போலீஸாரிடம் விவரம் கேட்டுள்ளனர்.இதுகுறித்து கோவை மாநகர போலீஸார் கூறியதாவது: கோவையில் 2022-ல் நடந்த கார் வெடிப்பு சம்பவமும், தற்போது டெல்லியில் நடந்த சம்பவமும் ஒன்றுபோலவே உள்ளது. காரை மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் நிறுத்தச் சென்றபோது முன்கூட்டியே வெடித்துள்ளது. எனவே, டெல்லி சம்பவத்தில் கைது செய்யப்பட்டு உள்ள நபர்களின் விவரங்களை என்ஐஏ-விடம் கேட்டுள்ளோம்.
அவர்கள் கோவைக்கு வந்து சென்றனரா அல்லது கோவையில் உள்ள தடை செய்யப்பட்ட இயக்க ஆதரவாளர்கள் யாரும் அவர்களை சந்தித்து உள்ளனரா என்பது குறித்தும் கேட்டுள்ளோம். கோவையில் கார் வெடிப்பு சம்பவம் நடந்ததற்கு பிறகு சந்தேக நபர்கள் என்று 140 பேர் கொண்ட பட்டியல் தயார் செய்யப்பட்டு, அவர்களை ரகசியமாக கண்காணித்து வருகிறோம். கோவையில் செயல்பட்டு வரும் தீவிரவாத தடுப்புப் பிரிவு போலீஸாரும் இது தொடர்பாக கண்காணித்து வருகின்றனர். மேலும், அந்த 140 பேரின் நண்பர்கள் சமூக வலைதளத்தில் பதிவேற்றம் செய்யும் கருத்துகள், அவர்களின் செல்போனுக்கு வரும் அழைப்புகள் உள்ளிட்டவற்றையும் கண்காணித்து வருகிறோம். இவ்வாறு போலீஸார் தெரிவித்தனர்.















