Home மாவட்டங்கள் பெங்களூர் தங்கச் சங்கிலி பறிக்கும் கும்பல் கைது

தங்கச் சங்கிலி பறிக்கும் கும்பல் கைது

பெங்களூரு: ஜூன் 12-
பெங்களூருவில் தனியாக நடந்து சென்ற பெண்ணிடம் தங்கச் சங்கிலியைப் பறித்துக்கொண்டு தப்பிய 2 வழிப்பறி கொள்ளையர்களை கெங்கேரி போலீஸார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர்.
கைதானவர்களிடம் இருந்து ரூ.6 லட்சம் மதிப்புள்ள 12.50 கிராம் எடையுள்ள 2 தங்கச் சங்கிலிகள் மற்றும் 4 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தென்மேற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் அனிதா பி. ஹத்தண்ணனவர் தெரிவித்துள்ளார்.
கேஜிஹள்ளியின் வெங்கடாபுரத்தைச் சேர்ந்த சையத் இர்பான் (25), மோடி ரோட்டைச் சேர்ந்த சையத் ரியான் (19) ஆகிய இருவருமே கைது செய்யப்பட்ட கொள்ளையர்கள் ஆவர்.
கடந்த மே 7-ம் தேதி காலை, கெங்கேரி பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் அங்கன்வாடி அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் வந்த இந்த இரண்டு கொள்ளையர்களும், அந்தப் பெண்ணின் கழுத்தில் இருந்த தங்க மாங்கல்ய சங்கிலியை கண் இமைக்கும் நேரத்தில் பறித்துக்கொண்டு தப்பினர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் பேரில் கெங்கேரி போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர். ரகசியத் தகவல் கிடைத்ததை அடுத்து, கடந்த மே 30-ம் தேதி டி.ஜே.ஹள்ளி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பதுங்கியிருந்த 2 கொள்ளையர்களையும் போலீஸார் அதிரடியாக வளைத்துப் பிடித்தனர்.
கைதான கொள்ளையர்களிடம் போலீஸார் நடத்திய அதிரடி விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின. அவர்கள் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில்:
நாங்கள் மது அருந்துவதற்கும், மற்ற கெட்ட பழக்க வழக்கங்களுக்கும் அடிமையாகி இருந்தோம். அந்த ஜாலி வாழ்க்கைக்குப் பணம் தேவைப்பட்டதால் தான் இந்த கொள்ளை சம்பவங்களில் ஈடுபட்டோம்.”
என்று வாய்விட்டு ஒப்புக் கொண்டுள்ளனர்.
மேலும், திருடிய இருசக்கர வாகனங்களை விற்பனை செய்வதற்காக தங்களது வீட்டின் அருகே உள்ள காலி இடத்தில் நிறுத்தி வைத்திருந்ததாகவும், பறித்த தங்கச் சங்கிலிகளை கே.ஜி.ஹள்ளியில் உள்ள ஒரு நகைக் கடையில் விற்றதாகவும் கூறினர். இதைத்தொடர்ந்து நகைகளையும், வாகனங்களையும் போலீஸார் பறிமுதல் செய்தனர்.
இந்தக் கொள்ளையர்கள் பிடிபட்டதன் மூலம், கெங்கேரி பகுதியில் நடந்த 2 சங்கிலி பறிப்பு வழக்குகள் மற்றும் ராமமூர்த்தி நகர், அவலஹள்ளி, கே.ஆர்.புரம், தவரேகெரே ஆகிய காவல் நிலைய எல்லைகளில் நடந்த தலா ஒரு பைக் திருட்டு என மொத்தம் 6 வழக்குகளுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளது.
இந்தக் கொள்ளையர்களைத் துரிதமாகச் செயல்பட்டு கைது செய்த கெங்கேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீஷ் என். மற்றும் அவரது தனிப்படையினரை உயர் அதிகாரிகள் வெகுவாகப் பாராட்டியுள்ளனர்.