Home செய்திகள் தேசிய செய்திகள் நீட் போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் – திரும்பப் பெற பிஹார், அசாம் அரசுகள் முடிவு

நீட் போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் – திரும்பப் பெற பிஹார், அசாம் அரசுகள் முடிவு

புதுடெல்லி: ஜூலை 28-
நீட் வினாத்தாள் கசிவுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெற முடிவெடுக்கப்பட்டுள்ளதாக பிஹார் மற்றும் அசாம் அரசுகள் அறிவித்துள்ளன.
நீட் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளுக்குப் பொறுப்பேற்று மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினமா செய்ய வலியுறுத்தி கரப்பான்பூச்சி ஜனதா கட்சி (சிஜேபி) சார்பில் டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடைபெற்றது.
இதையடுத்து, சிஜேபி பிரதிநிதிகளுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீதான அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற வேண்டும் என்பது உள்ளிட்ட மூன்று நிபந்தனைகள் ஏற்கப்பட்டன. இதையடுத்து, கடந்த 25ம் தேதி போராட்டம் திரும்பப் பெறப்பட்டது.
எனினும், இந்த நிபந்தனை முழுமையாக பின்பற்றப்படவில்லை என்றும், பலர் இன்னமும் சிறையில் உள்ளதாகவும், வழக்குகளை எதிர்கொள்வதாகவும் சிஜேபி நேற்று குற்றம் சாட்டியது. அவர்கள் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்படாவிட்டால் மீண்டும் போராட்டம் நடத்துவோம் என்றும் சிஜேபி எச்சரித்தது.
இந்நிலையில், ஜூலை 26-ம் தேதி மாலை 6 மணிக்குள் நடைபெற்ற போராட்டங்களில் பங்கேற்றவர்கள் மீது எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது என்று பிஹார் அரசு நேற்று மாலை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
பிஹார் காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “இடதுசாரி மாணவர் அமைப்புகள் ஜூலை 25-ம் தேதி அழைப்பு விடுத்த பிஹார் பந்த் போராட்டத்தின்போது மொத்தம் 694 பேர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர். இதில், 339 சிறார்கள் விடுவிக்கப்பட்டனர். மீதமுள்ள 355 பேர் மீது தொடர்புடைய சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
தற்போது, அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படாது என்ற அரசின் முடிவு காரணமாக அவர்கள் மீதான வழக்குகள் திரும்பப் பெறப்படும். அவர்கள் விடுவிக்கப்படுவார்கள்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், அசாம் அரசும் அறிவித்துள்ளது. அசாம் அரசு நேற்றிரவு வெளியிட்ட அறிக்கையில், “கடந்த வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நீட் வினாத்தாள் கசிவு போராட்டம் தொடர்பாக 13 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களை விடுவிப்பது குறித்த மறுஆய்வு நடவடிக்கை விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சிபிஎம் கட்சியின் மாணவர் அமைப்பான எஸ்எஃப்ஐ, ஜூலை 25 அன்று மாணவர் போராட்டத்துக்கு அழைப்பு விடுத்திருந்தது. இந்த போராட்டத்தில் மாணவர் சேர்வதைத் தடுக்க 50 போராட்டக்காரர்கள் தடுத்து வைக்கப்பட்டனர். பின்னர் அன்று இரவே அவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.