தந்தையை அடக்கம் செய்ய பணம் இல்லாமல் தவித்த 4 குழந்தைகள்

கள்ளக்குறிச்சி: நவம்பர் 17
கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே தந்தையின் இறுதி சடங்கு செலவுக்கு பணம் இல்லாமல் அவரது குழந்தைகள் பரிதவித்தார்கள். ஏழு வருடங்களுக்கு முன்பே தாயையும் பறிகொடுத்த குழந்தைகள், தற்போது தந்தையையும் இழந்தனர். யாருமே இல்லாத நிலையில், தந்தையின் இறுதி சடங்கு செலவுக்கு கூட காசில்லாமல் தவித்தனர். இதனை கண்ட கிராம மக்கள் வீடு வீடாக பணம் வசூலித்து உடலை அடக்கம் செய்தனர். இந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ளது பூட் என்ற கிராமம்.இங்கு 46 வயதாகும் கமலக்கண்ணன் என்பவர் வசித்து வந்தார். கூலி தொழிலாளியான இவருக்கு, வசந்தா (40) என்ற மனைவியும், லாவண்யா(24), ரீனா (21), ரிஷிகா(17) ஆகிய 3 மகள்களும், அபினேஷ் (13) என்ற மகனும் இருந்தார்கள். Photo Credit: ai image இதில் வசந்தா உடல்நலம் பாதிக்கப்பட்டு கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார்.
இதனால் கமலக்கண்ணன் கூலி வேலை செய்து தனது குழந்தைகளை பள்ளி, கல்லூரியில் படிக்க வைத்து வந்துள்ளார். இந்த நிலையில் கமலக்கண்ணனுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டது.
இதையடுத்து அவரை சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள்.அங்கு அவரை டாக்டர்கள் பரிசோதனை செய்தபோது சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருந்ததாக கூறினார்கள். இதையடுத்து கமலக்கண்ணன் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு கடந்த 4 மாதங்களாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இதனால் வருமானம் இல்லாததால் குடும்பம் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டது. பொறியியல் படித்து வந்த அவரது மகள் லாவண்யா கல்வி கட்டணத்தை செலுத்த முடியாமல் தனது படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டார். அதேபோல் 8-ம் வகுப்பு படித்து வந்த ரீனா, 10-ம் வகுப்பு படித்து வந்த ரிஷிகா ஆகியோரும் தங்கள் படிப்பை பாதியிலேயே நிறுத்திவிட்டார்கள்.
அபினேஷ் மட்டும் பூட்டையில் அரசு உதவிபெறும் பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்த நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த கமலக்கண்ணன் சிகிச்சை பலனின்றி கடந்த நவம்பர் 14-ந் தேதி காலமானார். இதையடுத்து அவரது உடல் அடக்கம் செய்வதற்காக சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டது. தகவல் அறிந்து வந்த உறவினர்கள், கிராம மக்கள் கமலக்கண்ணன் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள். ஆனால் தாய், தந்தையை இழந்த 4 குழந்தைகளும் தந்தையின் உடலை அடக்கம் செய்ய பணம் இல்லாமல் பரிதவித்தனர். உறவினர்களும் ஏழ்மையான நிலையில் இருந்ததால் அவர்களாலும் உதவி செய்ய முடியாத சூழ்நிலை இருந்தது. இதை கண்ட கிராம மக்கள், அந்த குழந்தைகளின் நிலை கண்டு கலங்கி போனார்கள். அத்துடன் கிராம மக்களே கமலக்கண்ணனின் உடலை அடக்கம் செய்ய தாங்களாகவே முன்வந்தார்கள்.
இதையடுத்து கிராம மக்களே வீடு வீடாக சென்று பணம் வசூலித்து கமலக்கண்ணனின் உடலை முன்னின்று அடக்கம் செய்தனா். உடல்நலக்குறைவால் இறந்த தந்தையின்
இறுதி சடங்கு செலவுக்கு பணம் இல்லாமல் அவரது குழந்தைகள் தவித்ததை கண்டு கிராமமக்கள் தாங்களாகவே முன்வந்து உடலை அடக்கம் செய்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.