
சென்னை: மே 14 –
தமிழகத்தில் சிறார்களிடையே அதிகரித்து வரும் மது பழக்கத்தை குறைக்கும் நோக்கில், இனி 21 வயது குறைந்தவர்களுக்கு மது விற்பனை செய்ய கூடாது என்றும், மீறி செய்தால் கடும் நடவடிக்கை பாயும் என்றும் டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டிருக்கிறது.
தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி ஆட்சி அதிகாரத்திற்கு வந்தவுடன், கல்வி நிலையங்கள், வழிபாட்டு தலங்கள் ஆகியவற்றிற்கு பக்கத்தில் இருக்கும் சுமார் 700க்கும் அதிகமான டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
இந்த உத்தரவு பொதுமக்களால்.. குறிப்பாக பெண்களால் வரவேற்கப்பட்டிருக்கிறது. இதனை தொடர்ந்து, தற்போது சிறார்களிடையே நிலவும் மது பழக்கத்தை கட்டுப்படுத்த புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. அதன்படி இனி 21 வயது குறைந்தோருக்கு மது விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை பாயும் என்று டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டிருக்கிறது. சீரியஸாகும் டாஸ்மாக் மேட்டர் தமிழ வெற்றிக் கழகம் இந்த தேர்தலை எதிர்கொண்டபோது டாஸ்மாக் விவகாரத்தை பெரிய விஷயமாக முன்னிறுத்தியிருந்தது. பாட்டிலுக்கு பத்து ரூபாய் என விஜய் தேர்தல் பிரச்சாரத்தில் பாட்டு கூட பாடியிருந்தார். எனவே விஜய் ஆட்சிக்கு வந்தால் டாஸ்மாக் கடைகயை மூட என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார் என்று பரவலாக எதிர்பார்ப்பு இருந்தது. குறிப்பாக பெண்கள் விஜய் மீது பெரிய நம்பிக்கை வைத்திருந்தனர். டாஸ்மாக் கடைகளால்தான் குடும்ப வன்முறை நடக்கிறது என்றும், அந்த கடைகளை மூடினால் புண்ணியமாக போகும் என்றும் கோரிக்கை வைத்திருந்தனர். எனவே இந்த விஷயத்தை சீரியஸாக எடுத்த விஜய், முதலமைச்சராக பதவியேற்ற பின்னர் அதிரடியாக 700க்கும் அதிகமான டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு பிறப்பித்தார்.
இதனை தொடர்ந்துதான் சிறார்களுக்கு மது விற்பனை செய்யக்கூடாது என்று கறார் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், சட்டம் ஏற்கெனவே 21 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மது விற்பனை செய்யக்கூடாது என்றுதான் சொல்லியிருக்கிறது. இப்படி இருக்கையில், கறார் உத்தரவு மூலம் ஏதோ புது விஷயத்தை தான் கொண்டு வந்ததை போல விஜய் காட்டிக்கொள்கிறார் என்று விமர்சனங்களும் எழுந்திருக்கின்றன. எப்படி இருப்பினும் 21 வயதுக்கு உட்பட்டோருக்கு மது இல்லை என்கிற கறார் உத்தரவு மக்களிடையே வரவேற்பை பெற்றிருக்கிறது.


















