தமிழக அரசுக்குஐகோர்ட் கண்டனம்

சென்னை: ஜன.1- விதிமீறல் கட்டிடங்களால் சென்னை மாநகரம் கான்கிரீட் காடாக மாறிவிட்டதால், மழை காலத்தில் வெள்ள பாதிப்புகளை சந்திக்க நேரிடுகிறது. கடமையை செய்ய தவறும் அதிகாரிகள் மீது அரசும் எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என உயர் நீதிமன்ற நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
சென்னையை சேர்ந்த சாந்தி என்பவருக்கு சொந்தமான கட்டி டத்தில் விதிமீறல் இருப்பதால், அதை சீல் வைத்து இடிப்பது தொடர்பாக மாநகராட்சி நோட்டீஸ் அனுப்பியது. அதற்கு மனு தாரர் தரப்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தை அதிகாரிகள் ஏற்கவில்லை.
இதனால், அரசுக்கு கடந்த நவம்பர் 26-ம் தேதி மறுஆய்வு மனு அளித்த நிலையில், அந்த மனுவை விரைந்து பரிசீலிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட கோரி உயர் நீதிமன்றத்தில் சாந்தி மனு தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்து, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிர மணியம், வி.லட்சுமி நாராயணன் அமர்வு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:அரசிடம் மறுஆய்வு மனு அளித்துவிட்டு, அதே வேகத்தில் இந்த வழக்கையும் மனுதாரர் தொடர்ந்துள்ளார். மறுஆய்வு மனுவை பரிசீலிக்க அதிகாரிகளுக்கு போதிய அவகாசம் தரவில்லை.
மாநகராட்சி நோட்டீஸ் மீதான விசாரணையை இழுத்தடிக்கும் நோக்கில் மனுதாரர் இந்த வழக்கை தொடர்ந்துள்ளார். எனவே, இந்த வழக்கை தள்ளுபடி செய்கிறோம். மனுதாரரின் மறுஆய்வு மனுவை அதிகாரிகள் சட்டத்துக்கு உட்பட்டு பரிசீலிக்க வேண்டும்.
விதிமீறி கட்டப்பட்டுள்ள கட்டிடங்களால் சென்னை மாநகரம் தற்போது கான்கிரீட் காடாக மாறிவிட்டது. இதனால், மழை காலத்தில் பெரும் வெள்ள பாதிப்புகளை சந்திக்க நேரிடுகிறது. விதிமீறி கட்டப்படும் கட்டிடங்கள் மீது ஆரம்ப கட்டத்திலேயே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க தவறு வதால்தான் அக்கம் பக்கத்தினர் மட்டுமின்றி அப்பகுதியில் வசிக்கும் அனைவரும் ஆபத்தை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.