தமிழக சட்டசபை தேர்தல்ஆயத்தப் பணிகள் துவக்கம்

சென்னை: டிசம்பர் 4 –
தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கான ஆயத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் தொடங்கி உள்ளது. 234 தொகுதிகளுக்கு தேர்தல் நடத்தும் அலுவலர்கள் மற்றும் உதவித் தேர்தல் அலுவலர்களை நியமித்து உத்தரவிட்டுள்ளது. ஒரு தொகுதிக்கு 2 முதல் 4 பேர் வரை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் 16வது சட்டமன்றத்தின் பதவிக்காலம் 2026 ஆம் ஆண்டு மே 10 ஆம் தேதி முடிவடைகிறது. அதற்கு முன்னர் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. 2026 தமிழக சட்டமன்ற தேர்தலை நடத்தும் அதிகாரிகள் விவரங்களை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ளார்.தமிழகத்தின் 234 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும் அதிகாரி மற்றும் உதவி அதிகாரிகள் விவரங்கள் அதில் இடம் பெற்றுள்ளன. ஒரு தொகுதிக்கு 2 முதல் 4 பேர் வரை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். அந்தந்த மாவட்டத்தின் கீழ் இருக்கக்கூடிய தொகுதிகளுக்கு அந்த மாவட்ட ஆட்சியர் தான் பொறுப்பாளராக இருப்பார். அதன் அடிப்படையில் ஒவ்வொரு மாவட்ட ஆட்சியரும் தேர்தல் அதிகாரியாக அந்த மாவட்டத்திற்கு செயல்படுவார். அவருக்கு கீழாக தொகுதிகளுக்கான நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். முதல்வர் ஸ்டாலினின் கொளத்தூர் சட்டமன்ற தொகுதி தேர்தல் அதிகாரியாக, கலால் துறையின் சேப்பாக்கம் பகுதி இணை ஆணையர் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினின் சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியின் தேர்தல் அதிகாரியாக தமிழ்நாடு சிமெண்ட் கார்ப்பரேஷன் லிமிடெட் பொது மேலாளர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி எம்.எல்.ஏவாக இருக்கும் எடப்பாடி தொகுதியின் தேர்தல் அதிகாரியாக சேலம் கலால் துறை உதவி ஆணையர் நியமிக்கப்பட்டுள்ளார். இதுபோள தமிழ்நாட்டின் 234 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக, கடந்த நவம்பர் 4ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. டிசம்பர் 4 ஆம் தேதி இந்த பணிகள் நிறைவடையும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. ஒரே மாதத்தில் இந்த பணிகளை முடிப்பதற்காக, 38 மாவட்ட தேர்தல் அதிகாரிகள், 234 வாக்காளர் பதிவு அலுவலர்கள், 713 உதவி வாக்காளர் பதிவு அலுவலர்கள், 68,467 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள், 7,234 வாக்குச்சாவடி நிலை அலுவலர் மேற்பார்வையாளர்கள் களத்தில் பணியாற்றி வருகின்றனர். மேலும், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சிகளையும் சேர்ந்த 2,44,685 வாக்குச்சாவடி நிலை முகவர்கள் இந்த பணியில் ஈடுபட்டுள்ளதாக தமிழக தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. கணக்கீட்டு படிவங்களை பெற்றுக்கொண்ட வாக்காளர்கள் தங்கள் படிவங்களை உடனடியாக பூர்த்தி செய்து டிசம்பர் 4 ஆம் தேதிக்குள் வாக்குச்சாவடி நிலை அலுவலரிடமோ அல்லது உதவி மையத்திலோ சமர்ப்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.
கணக்கீட்டு படிவங்களை பூர்த்தி செய்து ஒப்படைத்துள்ள அனைத்து வாக்காளர்களின் பெயர்களும் டிசம்பர் 9 ஆம் தேதி வெளியிடப்படவுள்ள வரைவு வாக்காளர் பட்டியலில் இடம்பெறும் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்கள் டிசம்பர் 9 ஆம் தேதி முதல் ஜனவரி 8 ஆம் தேதி வரை தங்கள் பெயரை இணைத்துக்கொள்ளலாம் என்றும், இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 7 ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்த படிவங்களை சமர்பிப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 11 ஆம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் டிசம்பர் மாதம் 11 ஆம் தேதி வரை நடைப்பெறும். அதன் பிறகு டிசம்பர் 12 முதல் 15 ஆம் தேதி வரை அட்டவணை புதுப்பித்தல் மற்றும் வரைவு பட்டியல் தயாரித்தல் பணிகள் நடைபெறும். இதையடுத்து வரைவு வாக்காளர் பட்டியல் டிசம்பர் 16 ஆம் தேதி வெளியிடப்படும். அந்த பட்டியிலில் பெயர் இல்லாதவர்கள் தங்கள் பெயர்களை சேர்த்துக்கொள்ள டிசம்பர் 16 ஆம் தேதி முதல் ஜனவரி 15 வரை கால அவகாசம் வழங்கப்படும். பின்னர் அவை டிசம்பர் 16 முதல் பிப்ரவரி 7 ஆம் தேதிக்குள் சரிபார்க்கப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியிடப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.