தமிழக தேர்தல் பொறுப்பை பியூஷ் கோயலிடம் ஒப்படைத்த பாஜக

டெல்லி, டிச. 15- தமிழ்நாடு தேர்தலையொட்டி ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயலை பாஜக பொறுப்பாளராக நியமித்தது. தமிழ்நாட்டில் அடுத்த ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலோடு புதுச்சேரி, கேரளா மாநில சட்டமன்ற தேர்தலும் நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்காக அரசியல் கட்சியினர் தீவிரமாக தயாராகி வருகின்றனர்.
கூட்டணி அமைப்பதில் அரசியல் கட்சிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். தமிழகத்தை பொறுத்தவரை திமுக கூட்டணி வலுவாக உள்ளது. அதிமுகவில் பாஜக மட்டுமே கூட்டணியில் இடம் பெற்றுள்ளது. அதிமுக கூட்டணியில் மேலும் சில கட்சிகளை இணைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அதிமுகவுடன் கூட்டணியில் உள்ள பாஜக, தேர்தல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலையொட்டி 3 மத்திய அமைச்சர்களை பாஜக களமிறக்கியுள்ளது.
2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை ஒட்டி 3 பேர் குழுவை பாஜக தேசிய தலைமை அமைத்தது. அதில்; தமிழ்நாடு தேர்தல் பாஜக பொறுப்பாளராக ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் மீண்டும் நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஒன்றிய அமைச்சர்கள் அர்ஜுன் ராம் மேக்வால், முரளிதர் மொஹோல் ஆகியோர் இணை பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 2021 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் பாஜக பொறுப்பாளராகவும் ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் நியமிக்கப்பட்டிருந்தார்