தமிழக பிஜேபியில் மாநில அளவில் விரிசல்?

சென்னை: செப்.30-
கரூரில் 47 பேர் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கரூர் சென்று உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தியதோடு காயமடைந்தவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார். கரூர் மாவட்ட எல்லையில் அவரை வரவேற்று அண்ணாமலை அதற்குப் பிறகான நிகழ்வுகளில் கலந்துகொள்ளவில்லை. நிர்மலா சீதாராமன் நிகழ்வுகளில், எல்.முருகன் மட்டுமே பங்கேற்ற நிலையில் தமிழக பாஜகவில் விரிசல் ஏற்பட்டுள்ளதா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.
தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை இருந்தபோது அதிமுக பாஜக கூட்டணி உடைந்தது. 2026 தேர்தலை முன்னிட்டு அந்தக் கூட்டணி மீண்டும் சேர்ந்த நிலையில் கட்சிப் பதவியிலிருந்து நீக்கப்பட்டார் அண்ணாமலை. அதற்குப் பிறகு அவருக்கு மிகப்பெரிய பொறுப்பு வழங்கப்படும் எனக் கூறி வருகின்றனர் பாஜகவினர். ஆனால் அது தொடர்பான அறிவிப்பு இன்னும் வரவில்லை. இந்த நிலையில் அதிமுக பாஜக கூட்டணியை வலுவாக்கும் வகையில் ஓபிஎஸ், டிடிவியை மீண்டும் கூட்டணிக்கு அழைத்து வரும் பொறுப்பு அண்ணாமலைக்கு வழங்கப்பட்டிருக்கிறது. கரூர் விபத்து அதே நேரத்தில் பாஜகவில் இதுவரை இல்லாத அளவு தனிமனிதத் துதி இருப்பதாகவும் அதற்கு அண்ணாமலையே காரணம் என சில தலைவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்த நிலையில் கரூரில் ஏற்பட்ட துயர சம்பவம் இந்தியா முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து கேள்விப்பட்ட உடனே பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்தார். தொடர்ந்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று கரூர் வந்திருந்தார். கூட்ட நெரிசல் ஏற்பட்ட இடம், காயமடைந்தவர்கள் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனை ஆகியவற்றுக்கு நேரில் சென்று நிர்மலா சீதாராமன் சம்பவம் குறித்து பொதுமக்கள், காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோருடனும் கேட்டறிந்தார். அதற்குப் பிறகு இது குறித்து பிரதமர் நரேந்திர மோடியிடம் பேச இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.