
சென்னை: மார்ச் 1-
தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று தமது 73-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இதையொட்டி, அவருக்கு அரசியல் தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
முதலமைச்சர் ஸ்டாலின் தனது பிறந்தநாளை இன்று காலை வீட்டில் மனைவி துர்கா ஸ்டாலின், மற்றும் குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடினார். மேலும், தனது பிறந்தநாளையொட்டி, பெரியார், அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் மரியாதை செலுத்துகிறார்.
காலை 8 மணிக்கு சென்னை மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா, கருணாநிதி நினைவிடங்களுக்கு செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார். தொடர்ந்து, காலை 8.30 மணிக்கு வேப்பேரியில் உள்ள பெரியார் நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து மரியாதை செய்கிறார். பின்னர்,
கோபாலபுரம் சென்று தாயார் தயாளு அம்மாளிடமும், சிஐடி நகரில் ராஜாத்தி அம்மாளிடமும் வாழ்த்து பெறுகிறார் முதல்வர் ஸ்டாலின். அதைத்தொடர்ந்து அவர், காலை 9 மணியளவில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் தொண்டர்களின் வாழ்த்துகளை பெற்றுக் கொள்கிறார். அண்ணா அறிவாலயம் வரும் அவருக்கு, பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதைத்தொடர்ந்து, கலைஞர் அரங்கில்,
அமைச்சர்கள், திமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்களின் வாழ்த்துகளை பெற்றுக் கொள்கிறார். முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு திமுக சார்பில் அனைத்து மாவட்டங்களிலும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.















