தமிழில் அறிவியல் நூல்கள் வரவேண்டும் – மயில்சாமி அண்ணாதுரை வலியுறுத்தல்

பெங்களூர், டிசம்பர் 8-
த‌மிழில் அறிவியல் நூல்கள் அதிகம் வெளிவர வேண்டும் என்று தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சிலின் துணைத் தலைவர், தேசிய வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி மன்றத்தின் ஆளுநர் குழுவின் தலைவர் விஞ்ஞானி டாக்டர் மயில்சாமி அண்ணாத்துரை தெரிவித்தார்.பெங்களூரில் நடைபெறும் தமிழ்ப் புத்தக திருவிழாவில் ராணுவ விஞ்ஞானி டில்லிபாபு எழுதிய புத்தகத்தை ஞாயிற்றுக்கிழமை (டிச. 7) டாக்டர் மயில்சாமி அண்ணாத்துரை வெளியிட்டு பேசியது: ராணுவ விஞ்ஞானி டில்லி பாபு எழுதி இருக்கும் வெள்ளோட்டம் வெல்லட்டும் என்ற நூல் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வது மகிழ்ச்சியாக உள்ளது. இந்த நூல் கடந்தாண்டு வெளியிட ஏற்பாடு செய்யப்பட்டது. இடையில் நூல் ஆசிரியரின் தாயார் மரணமடைந்தார். அதன் காரணமாக ஓராண்டு கழித்து வெளியிடப்படுகிறது.
நமது தமிழ் சமுதாயம், குறிப்பாக இளைஞர்கள் நமது தாய் மொழியில் அறிவியல் நூல்களை படிக்க வேண்டும் என்ற ஆவலில் நூல் ஆசிரியர் ஏற்கனவே 9 நூல்கள் தமிழ் மொழியில் எழுதிய நிலையில் 10 வது நூலாக வெள்ளோட்டம் வெல்லட்டும் என்ற நூல் வெளியிட்டுள்ளார். தமிழை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல வேண்டும். இலக்கிய நயத்துடன் அறிவியலைச் சொல்ல முடியும். அதனைதான் ஆசிரியர் இந்த புத்தகத்தில் செய்துள்ளார்.அமெரிக்கா கண்டுபிடிக்க முடியாத நீர் நிலைகளை கண்டு பிடித்தவர்கள் நாம். சொல்ல நினைப்பதை தாய்மொழியில் சொல்ல வேண்டும்.மொழிகளுக்கு எல்லாம் தாய்மொழியாக இருப்பது தமிழ். தமிழர்களாக நாம் பிறந்துள்ளது நமக்கு கிடைக்க வரம். இயல், இசை, கூத்து என்ற முத்தமிழுடன் நான்காவது மொழியாக த‌மிழ் இருக்க வேண்டும். த‌மிழில் அறிவியல் நூல்கள் வர வேண்டும். பல மொழிகள் கற்றுக் கொள்ள வேண்டும் என்று சொன்னாலும் உலக மொழிக் கெல்லாம் மூத்த மொழியாக தமிழ் இருக்கும் போது நமக்கு வேறு மொழியின் அவசியம் இல்லை. வெள்ளோட்டம் வெல்லட்டும் என்ற நூலில் கேள்வி பதில்கள் வைத்து எளிமையாக எழுதி உள்ளார். இதை தமிழர்கள் படித்த பயன்பெற வேண்டும். ஆங்கிலம் ஆதிக்க மொழியாக கருதப்பட்டாலும் நமது தாய்மொழியான தமிழ் மொழிக்கு இணை வேறு இல்லை. நமது மொழியில் எழுதி இருக்கும் நூல் வரலாற்றில் இடம் பிடிக்கும், த‌மிழில் அறிவியல் நூல்கள் அதிகம் வெளிவர வேண்டும் என்றார். அறிவியல் தொழில் நுட்பங்கள் வெள்ளோட்டமாக தெரிவித்துள்ளேன் என்றார்.