பெங்களூரு, டிசம்பர் 12-
தமிழ் அனைத்து மொழிகளுக்கும் தாய் என்று சொல்லின் செல்வர் ஆவடி குமார் தெரிவித்தார்.பெங்களூரில் நடைபெற்று வருகிற தமிழ் புத்தக திருவிழாவின் 7வது நாளான நேற்று காலை 10 மணி முதல் பகல் 1.30 மணி வரை முதல் நிலை கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகள் பங்கேற்ற மொழி திறன் போட்டியில் 200க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
கவிதை, கட்டுரை, பேச்சு, நடனம், குழு நடனம், கேள்விக்கென்ன பதில் உள்ளிட்ட தலைப்புகளில் நடைபெற்ற மொழி திறன் போட்டியில் ஆர்வமுடன் பங்கேற்றனர். இது பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.புத்தக திருவிழாவில் நேற்று மாலை மதுரை ஜெயமணிகண்டன் குழுவினரின் ‘‘வள்ளி திருமணம்’’ என்ற சமூக நாடக அரங்கேற்றம் நடைபெற்றது. கே.ஜி.இராஜேந்திரபாபு மற்றும் ஹரிஷ் சின்னராஜன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.
நூலரங்கம் நிகழ்ச்சி நடந்தது. இதில் ஆவடி குமார் எழுதியுள்ள ‘‘ஆவடியார் குறள்’’ என்ற நூல் வெளியிட்டு விழா கவிஞர் எஸ்.வி.ஆர்.மூர்த்தி தலைமையில் நடைபெற்றது. நூலை சி.விஜயலட்சுமி மோகன் அறிமுகம் செய்தார். சிறுமலர் பள்ளி தாளார் அ.மதுசூதனபாபு நூலை வெளியிட பெங்களூரு தமிழ்ச்சங்க முன்னாள் தலைவர் தி.கோ.தாமோதரன் பெற்று கொண்டார்.
நூல் குறித்து ஆர்.வைத்தியநாதன், பேராசிரியர் பொன்.க.சுப்ரமணி, எம்.சம்பத், அமுத பாண்டியன், மரு.ம.ராஜ்குமார் ஆகியோர் திறனாய்பு செய்தனர். முனைவர் கே.மலர்விழி, இர.தேன்மொழி, சீனு ராமசாமி, நாகம்மாள நீலகாந்தன், வே,கல்யாணகுமார், மீனு சோனு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முடிவில் நூலாசிரியர் ஆவடி குமார் ஏற்புரை ஆற்றினார்.
அப்போது அவர் எல்லா மொழிகளுக்கும் தாய் தமிழ் என்றார். மேலும் அவர் பேசியது: தமிழில் இலக்கணம் உருவாவதற்கு முன்பு இலக்கியம் இருந்திருக்கிறது. நாம் இலக்கணத்தை வைத்து இலக்கியம் படிக்கிறோம். ஆனால் இலக்கணம் அதற்கு முன்பே உருவாகி இருப்பதை நன்நூல், தொல்காப்பியம் சொல்கிறது.
அப்படி என்றால் எப்படி இலக்கியம் உருவாகி இருக்க முடியும். அந்த இலக்கியம் என்பது மனிதர்களுடைய வாழ்வியல். அவர்கள் வாழ்ந்த வாழ்க்கை முறை இலக்கியமாக பதிவு செய்துள்ளனர்.அதப் பதிவு வரையறுக்கப்படுகிற போது, அது இலக்கணமாக, நன்நூலாக, தொல்காப்பியமாக ஆகியுள்ளது. அதற்கு முந்தைய நூல்கள் நமக்கு கிடைக்கப்பெறவில்லை.
இந்த இலக்கண மரபை தமிழர்கள் பின்பற்றுகிறார்கள் என்றால் அதுதான் தமிழ். தமிழில் முதலில் செய்யுள் நடைதான் இருந்தது. உரைநடை இல்லை. மற்ற மொழிகளிலிருந்து பெற்ற உரை நடை பழக்கதிற்கு வந்தது. கவிதை, செய்யுள் நடை மரபைத்தான் நாம் பின்பற்றி வந்தோம். அந்த மரபை நாம் மறந்து விட்டோம் என்றார். நிகழ்ச்சியை மு.கி.லீலாவதி தொகுத்து வழங்கினார்.















