
பாட்னா: அக்.20-
ராஷ்டிரிய ஜனதா தள தலைமையிடம் ரூ.2.7 கோடி லஞ்சம் கொடுத்தும் சீட் தரவில்லை என்று அந்த கட்சியின் மூத்த தலைவர் மதன் ஷா குற்றம் சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக கட்சித் தலைவர் லாலுவின் வீட்டின் முன்பு அவர் சட்டையை கிழித்து, தரையில் புரண்டு கதறி அழுதார். பிஹாரின் மதுபனி பகுதியை சேர்ந்த ராஷ்டிரிய ஜனதா தள (ஆர்ஜேடி) மூத்த தலைவர் மதன் ஷா. இவர் மதுபனி சட்டப்பேரவைத் தொகுதியில் ஆர்ஜேடி சார்பில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால் அவருக்கு சீட் வழங்கப்படவில்லை.
இதனால் அதிருப்தி அடைந்த அவர் பாட்னாவில் உள்ள ஆர்ஜேடி தலைவர் லாலு பிரசாத்தின் வீட்டுக்கு நேற்று சென்றார். பாதுகாவலர்கள் அவரை உள்ளே விடவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவர், சட்டையை கிழித்து சாலையில் உருண்டு, புரண்டு போராட்டம் நடத்தினார்.
இதுகுறித்து நிருபர்களிடம் அவர் கூறியதாவது: மதுபனி தொகுதியில் போட்டியிட கட்சித் தலைமை என்னிடம் ரூ.2.7 கோடி கேட்டது. எனது பிள்ளைகளின் திருமணத்தை நிறுத்தினேன். எனக்கு சொந்தமான நிலத்தை விற்றேன். இவற்றின் மூலம் கிடைத்த பணத்தை கட்சி தலைமையிடம் செலுத்தினேன். ஆனால் எனக்கு சீட் வழங்கவில்லை.
துலு சமுதாயத்தைச் சேர்ந்த எனக்கு தேர்தலில் போட்டியிட நிச்சயம் வாய்ப்பு வழங்குவதாக லாலுவும் அவரது மகன் தேஜஸ்வியும் உறுதி அளித்திருந்தனர். ஆனால் இருவரும் என்னை ஏமாற்றிவிட்டனர். இவ்வாறு மதன் ஷா தெரிவித்தார்.