
சென்னை: மே 21 –
“தமிழக அரசியலில் எத்தகைய உயரத்தில் இருந்தவர் வைகோ. அப்படிப்பட்டவர் இன்றைக்கு விஜய் தனது வீட்டுக்கு வந்ததை துள்ளிக் குதித்துக் கொண்டாடும் நிலைக்கு ஆளாகி இருக்கிறாரே” என மதிமுக முன்னாள் நிர்வாகிகள் வருத்தப்பட்டுச் சொல்கிறார்கள்.
இந்தத் தேர்தலில் தவெக-வுடன் போய்விடலாம் என்பது தான் துரை வைகோவின் எண்ணம். அப்படிப் போயிருந்தால் இப்போது மதிமுக-வுக்கு குறைந்தபட்சம் 10 எம்எல்ஏ-க்களும் 2 அமைச்சர்களும் கிடைத்திருக்கலாம். ஆனால், திமுக-வுடன் கூட்டணி என்று வைகோ எடுத்த முடிவால் மதிமுக-வின் தலையெழுத்தே மாறிப் போனது.
இம்முறை மதிமுக-வுக்கு 2-ல் ஆரம்பித்து கடைசியில் 4 இடங்களை ஒதுக்கிய திமுக, முன்னெச்சரிக்கையாக யோசித்து 3 தொகுதிகளில் உதயசூரியனில் தான் நிற்க வேண்டும் என நிர்பந்தித்தது. அதற்கும் சம்மதித்த வைகோ, கடைசியில் நான்கு தொகுதிகளிலுமே மதிமுக வேட்பாளர்களை உதயசூரியனிலேயே போட்டியிட வைத்தார். இதனால் இரண்டு தொகுதிகளில் வென்றாலும் திமுக-வின் கட்டுக்குள் இருக்க வேண்டிய கட்டாயம் மதிமுக எம்எல்ஏ-க்களுக்கு.
முதல்வர் விஜய் தங்கள் வீட்டுக்கு வந்தபோது தனது வீட்டில் இருந்தவர்களைச் சுட்டிக்காட்டி “இவர்கள் எல்லாம் விசிலுக்கு தான் வாக்களித்தார்கள்” என்று விஜய்க்கு விளக்கினார் துரை வைகோ. அப்போதே மதிமுக அடுத்து எந்தத் திசையில் பயணிக்கப் போகிறது என்பது அரசல் புரசலாக தெரிந்துவிட்டது. அதுபோலவே, விஜய் அரசின் மீதான நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் போது மதிமுக எம்எல்ஏ-க்கள் இருவரும் பேரவைக்கு வராமல் ‘ஆப்சென்ட்’ ஆனார்கள். “கட்சியின் நிர்வாகக் குழு கூட்டம் இருந்ததால் அவர்களால் பேரவைக்கு வரமுடியவில்லை” என்று காரணம் சொன்னார் வைகோ.
ஆனால், “16-ம் தேதி வைத்திருந்த நிர்வாகக் குழுவை 13-ம் தேதிக்கு மாற்றியது ஏன்?” எனச் சிலர் கேள்வி எழுப்புகிறார்கள். ஒருவேளை, திமுக வாக்கெடுப்பில் பங்கெடுத்திருந்தால் உதயசூரியன் எம்எல்ஏ-க்கள் இருவர் வாக்கெடுப்பில் பங்கேற்கவில்லை என்ற செய்தி வரலாற்றுப் பதிவாகி இருக்கும். அதையும் தவிர்க்கவே தந்திரமாக வாக்கெடுப்பையே புறக்கணித்துவிட்டது திமுக.
இதுகுறித்து நம்மிடம் பேசிய மதிமுக முன்னாள் நிர்வாகிகள் சிலர், “எப்போதுமே நாம் ஜெயிக்க வேண்டும் என்பதைவிட யார் ஜெயிக்கக் கூடாது என்பதில் வைகோ கவனமாக இருப்பார். 2001-ல் தனித்துப் போட்டியிட்டது மதிமுக. அப்போது மதுரை மேற்கில் திமுக வேட்பாளராகப் போட்டியிட்ட பெரியவர் பி.டி.ஆர்.பழனிவேல்ராஜனை எதிர்த்து மனோகரனை நிறுத்தியது மதிமுக. அவருக்கு சுமார் 1,900 வாக்குகள் கிடைத்தது. அதிமுக-விடம் சுமார் 700 வாக்குகளில் பிடிஆர் தோற்றார். அப்போது, ‘நீங்கள் ஜெயிக்காட்டா என்ன… பிடிஆர் தோத்துட்டார்ல’ என்று தான் மனோகரனுக்கு ‘சந்தோஷமாய்’ சமாதானம் சொன்னார்கள்.
அதேபோல் இப்போது, நம்மால் முடியாததை விஜய் சாதித்து விட்டார் என்று மதிமுக வட்டாரம் ஆனந்தப்படுவது போல் தெரிகிறது. இளைஞர்கள் விஜய் பக்கம் திரும்பிவிட்டதால் இனி திமுக எழுந்து நிற்பது கஷ்டம் என வைகோ நினைத்திருக்கலாம். கடந்த மக்களவைத் தேர்தலில் திருச்சியில் திமுக தயவில் தான் துரை வைகோ எம்.பி. ஆனார்.

















