Home மாவட்டங்கள் பெங்களூர் நீட் தேர்வு முறைகேடு கண்டித்து காங்கிரஸ் போராட்டம்

நீட் தேர்வு முறைகேடு கண்டித்து காங்கிரஸ் போராட்டம்

பெங்களூரு: மே 21 –
மருத்துவப் படிப்புக்கான ‘நீட்’ நுழைவுத் தேர்வில் நடந்துள்ள முறைகேடுகளைக் கண்டித்து, மத்திய அரசுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி இன்று பிரம்மாண்ட கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.
பெங்களூரில் உள்ள சுதந்திரப் பூங்காவில் இளைஞர் காங்கிரஸ் சார்பில் இந்தத் தர்ணா போராட்டம் நடைபெற்றது. இதில் கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வரும் கே.பி.சி.சி தலைவருமான டி.கே. சிவக்குமார், அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், தலைவர்கள் என நூற்றுக்கணக்கான தொண்டர்கள் திரண்டு நீட் முறைகேட்டிற்கு எதிராக தங்களது ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினர்.
நீட் தேர்வு முறைகேடுகளுக்கு மத்திய அரசே முழுப் பொறுப்பு என்றும், பிரதமர் நரேந்திர மோடி இதற்கு பொறுப்பேற்று உடனடியாகத் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என்றும் காங்கிரஸ் தலைவர்கள் ஒருமித்த குரலில் வலியுறுத்தினர்.
இந்த ஆண்டு நாடு முழுவதும் 22 லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் நீட் தேர்வு எழுதியிருந்தனர். இந்நிலையில், நீட் தேர்வை ரத்து செய்திருப்பது மாணவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகும். இந்த முடிவு மத்திய அரசின் நிர்வாகத் தோல்வியைக் காட்டுகிறது என்று காங்கிரஸ் தலைவர்கள் சாடினர்.
நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு, மறுதேர்வு நடத்துவதன் மூலம் மத்திய அரசு இளைஞர்களுக்குத் துரோகம் இழைத்துள்ளது. இதற்கு டெல்லி அரசே பொறுப்பேற்க வேண்டும் என்று போராட்டக்காரர்கள் முழக்கமிட்டனர்.
மேலும், நீட் முறைகேட்டுடன் தொடர்புடைய குற்றவாளிகளுடன் மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்குத் தொடர்பு இருப்பதாகக் குற்றம் சாட்டிய ‘கை’party தலைவர்கள், அவரும் தனது அமைச்சர் பதவியை உடனடியாக ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.
மத்திய அரசின் நீட் தேர்வை முற்றிலுமாக ரத்து செய்ய வேண்டும் என்றும், பழையபடி அந்தந்த மாநிலங்களே மருத்துவப் படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வைநடத்திக் கொள்ள அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் இந்த போராட்டத்தின் வாயிலாக முன்வைக்கப்பட்டது.
நீட் தேர்வில் தொடர்ந்து முறைகேடுகள் நடந்து வருகின்றன. இதில் வெளிப்படைத்தன்மை இல்லை. இதனால் தகுதியுள்ள ஏழை மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது. எனவே, உடனடியாக நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு, மாநிலங்களிடமே தேர்வு நடத்தும் அதிகாரத்தை ஒப்படைக்க வேண்டும்” என்று தலைவர்கள் வலியுறுத்தினர்.
இந்த முறைகேட்டிற்கு காரணமான அனைவருக்கும் கடுமையான தண்டனை வழங்கப்பட வேண்டும் என்றும், காலவரையறைக்குள் இந்த விசாரணை நடத்தி முடிக்கப்பட வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஸ்தம்பித்த போக்குவரத்து!
போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தொண்டர்கள், மத்திய அரசுக்கு எதிராகவும், பிரதமர் மோடி மற்றும் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வலியுறுத்தியும் பதாகைகளை ஏந்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
இளைஞர் காங்கிரஸின் இந்தப் போராட்டம் காரணமாக, சுதந்திரப் பூங்காவைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. போராட்டத்தால் அப்பகுதியின் முக்கியச் சாலைகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகினர்.