
மும்பை, ஜூன் 17- மகாராஷ்டிரா அரசியலில் மீண்டும் ஒரு புயல் வீசத் தொடங்கியுள்ளது. முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா (UBT) கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (MPs) சிலர், முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணிக்கு மாறப்போவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கடந்த 2022ம் ஆண்டு உத்தவ் தாக்கரே தலைமையிலான அரசு மகாராஷ்டிராவில் இருந்தது. அப்போது யாரும் எதிர்பாராத விதமாக திடீரென ஷிண்டே கலகம் செய்தார். இதனால் உத்தவ் அரசு கவிழ்ந்தது. பாஜகவின் ஆதரவுடன் ஷிண்டே ஆட்சியை அமைத்த நிலையில், முதல்வராகவும் பதவியேற்றார். அதன் பிறகு அங்கு நடந்தது எல்லாம் அனைவருக்கும் தெரியும். இதற்கிடையே மீண்டும் உத்தவ் அணியில் ஒரு பிளவு ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. உத்தவ் தாக்கரே அணியைச் சேர்ந்த சில மக்களவை உறுப்பினர்கள் கட்சியின் மூத்த தலைவர்களின் அழைப்புகளுக்குப் பதிலளிக்காமல் இருக்கிறார்களாம்.. அவர்களுக்கு போன் செய்தாலும் ஸ்விட்ச் ஆஃப் என்பதே பதிலாக வருகிறதாம். அதே நேரம், அவர்கள் டெல்லிக்கு விரைந்துள்ளதால், கட்சியில் மீண்டும் ஒரு பிளவு ஏற்படப்போகிறதோ என்ற அச்சம் உத்தவ் தாக்கரே தரப்பிற்கு ஏற்பட்டுள்ளது. அதிருப்தியில் உள்ள எம்பிக்கள் டெல்லியில் உள்ள ஸ்ரீகாந்த் ஷிண்டேவின் (துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் மகன்) இல்லத்தில் இன்று சந்திக்க உள்ளனர். இந்தச் சந்திப்பில் ஏக்நாத் ஷிண்டேவும் கலந்துகொள்ள வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. அடுத்து என்ன இந்தச் சந்திப்பைத் தொடர்ந்து, அந்த எம்.பி.க்கள் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவைச் சந்திக்கத் திட்டமிட்டுள்ளனர். முதலில் மக்களவையில் தங்களைத் தனி அணியாக அங்கீகரிக்கக் கோருவார்கள் என்றும், பின்னர் அந்த அணியை ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவுடன் இணைப்பார்கள் என்றும் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


















